பள்ளி மேலாண்மை குழுவுடன் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை

0
64

வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை ஆனைமலை பள்ளிக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு மற்றும் மாணவர்களின் பெற்றோருடன் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தை

ஆனைமலையில் உள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்கள் மிகவும் பழுதடைந்தது. இதையடுத்து அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்கு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்களுடன் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவருடன் வட்டாச்சியர் மாரீஸ்வரன் உடன் இருந்தார்.

பழமையான கட்டிடம்

அப்போது வேளாண் அதிகாரிகள் கூறுகையில்

வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகங்கள் 50 ஆண்டுகள் பழமையானவை என்பதால் பழுதடைந்து கிடக்கிறது. இதனால் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மாற்று இடம் இல்லாததால் புதிய கட்டிடம் கட்டும் பணியின் நிதி வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த தாசில்தார் அலுவலகம், புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. எனவே புதிய கட்டிடம் கட்டும் வரை இந்த இடத்திற்கு வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலக இடமாற்றம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மாற்றலாம்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களும் பெற்றோர்களும் கூறியதாவது:-

ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3½ ஆண்டுகளாக தாசில்தார் அலுவலகம் செயல்பட்டது. இதனால் பள்ளிக்கு வெளிநபர்கள் அதிகளவு வந்தனர். இதனால் அடிக்கடி மாணவர்கள் பள்ளி வளாகத்திற்கு வெளியே சென்று வந்தனர். அவர்களை ஆசிரியர்களால் கண்காணிக்க இயலவில்லை. இதன் காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மாற்றலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதனைத்தொடர்ந்து சப்-கலெக்டர் பிரியங்கா கூறுகையில்:- பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகள் பணி செய்ய போதிய அளவு இடம் இல்லாத பட்சத்தில் ஆனைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 அறைகள் மட்டும் வழங்க வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலை துறை கட்டிட பணிகளை ஓராண்டுக்குள் நிறைவு செய்து கட்டிடங்களை திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.