பள்ளி மாணவிகள் 3 பேர் கடத்தல்? – போலீசார் விசாரணை

0
84

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் 3 மாணவிகள். இதில் ஒரு மாணவி 7-ம் வகுப்பும், மற்ற 2 மாணவிகள் 8-ம் வகுப்பும் அ தே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார்கள்.

நேற்று மாலை அவர்களது வீட்டின் முன்பு இருந்த மாணவிகள் திடீரென காணவில்லை. அவரது பெற்றோர் பல்வேறு இடத்தில் தேடி பார்த்தும் மாணவிகள் குறித்து தெரியவில்லை. இதையடுத்து அவர்கள் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து, மாணவிகள் கடத்தப்பட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையே ஒரே நேரத்தில் 3 மாணவிகள் மாயமானது பற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை மேற்கொண்டார். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கைபற்றி விசாரணை மேற்கொள்ளும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அங்கிருந்து கடலூர் பஸ்நிலையம் வந்த அவர், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில், மாணவிகள் யாரேனும் உள்ளனாரா என்றும் பார்வையிட்டார். அப்போது அவருடன் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரி சங்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர். தொடர்ந்து தீவிரமாக போலீசார் மாணவிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.