பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல்; 6 பேர் கைது

0
47

கோவை; கோவையில் பள்ளி மாணவர்களை சரமாரியாக தாக்கிய, சக மாணவர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை, உடையாம்பாளையம், அசோக் வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் மவுரி, 17. இவர் நவ இந்தியா பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6ம் தேதி மவுரி தனது வீட்டின் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அவருடன் படிக்கும், 16 வயது சிறுவர்கள் இருவர் பைக்கில் வந்து, மவுரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றனர்.

மறுநாள் இது குறித்து மவுரி, அந்த மாணவர்களிடம் கேட்டார். அவர்கள் பதிலளிக்காமல் சென்றுவிட்டனர். கடந்த 10ம் தேதி மவுரி தனது நண்பர்கள் சலீம், கதிரவன், சர்வேஷ் ஆகியோருடன் பள்ளியில் இருந்து, நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த அந்த இரண்டு சிறுவர்கள் மவுரியையும், நண்பர்களையும் சவுரிபாளையம் ரோடு, நேவி நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டினர். இதனிடையே, சிறுவர்களின் நண்பர்களான ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகதீஸ், 19, யோகேஷ், 20, சஞ்சய், 19 மற்றும் ஜீவா, 20 ஆகியோர் காரில் அங்கு வந்தனர்.

ஆறு பேரும் சேர்ந்து மவுரி, கதிரவன், சர்வேஷ், சலீம் ஆகியோரை உடைந்து கிடந்த பாட்டில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால், சரமாரியாக தாக்கினர். மாணவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே ஆறு பேரும் காரில் தப்பினர். காயமடைந்த மாணவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மவுரி, பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, 16 வயது சிறுவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். சிறுவர்கள் இருவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். பிரகதீஸ், யோகேஷ், சஞ்சய், ஜீவா ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.