பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து பழங்குடியின மாணவி சாதனை

0
9

காரமடை அருகே மலைவாழ் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி அரசு பள்ளியில் 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து, சாதனை புரிந்துள்ளார்.

காரமடை அருகே சீளியூரில் அரசு உதவி பெறும் தி துரைசாமி கவுடர் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 48 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதில், காரமடை அருகே ஊக்கப்பட்டி மலைவாழ் கிராமத்தை சேர்ந்த காயத்ரி என்னும் பழங்குடியின மாணவி 561 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார். அவருக்கு நேற்று பள்ளி சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து, மாணவி காயத்திரி கூறுகையில், ”12ம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில், வரலாறு குரூப் படித்தேன். அப்பா, அம்மா மிகவும் கஷ்டப்பட்டவர்கள். பஸ் வசதி பெரிதும் இல்லாத போதும், படிப்பை கைவிடாமல் தொடர்ந்து படித்தேன்.

பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மிகவும் என் மீது அன்பு வைத்து உதவி புரிந்தனர்,” என்றார்.—–