பள்ளிகள் மூலம் பெற்றோருக்கு ஓட்டுனர் உரிமம்

0
59

விழிப்புணர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாலைகளில் செல்லும் போது நமக்கு இடதுபுறம் முக்கோண, வட்ட, சதுர வடியில் என 3 வகையான வடிவங்களில் குறியீடுகள் இருக்கும். அதாவது அவை எச்சரிக்கை, உத்தரவு, தகவல் ஆகிய சின்னங்களாக வகைப்படுத்தப்படுகிறது. பள்ளி சுவற்றில் பொருத்தப்பட்டு உள்ள இந்த சின்னங்கள் குறித்து மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாலையில் கவனமாக செல்ல வேண்டும். பெற்றோர்கள் ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை ஓட்டுகிறார்களா என்று பார்க்க வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் பெற்றோரிடம் குழந்தைகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெற்றோர்களுக்கு ஓட்டுனர் உரிமம்

சுற்றுலா செல்லும் போது வாகனங்களின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும். பெற்றோர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இல்லையென்றால் பள்ளிகள் மூலம் ஓட்டுனர் உரிமம் பெற்றுக் கொடுக்கப்படும். பஸ்களில் மாணவ-மாணவிகள் தொங்கி கொண்டு பயணம் செய்வதால் உயிரிழப்புகள் ஏற்பட கூடும். 15 பள்ளிகளில் 3 வகையான சின்னங்களை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது ஆனைமலை, பெத்தநாயக்கனூர் பள்ளிகளில் அவை வைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மாணவ- மாணவிகள் சாலையில் செல்லும் போது பார்த்த போக்குவரத்து சின்னங்களை வரைந்து காண்பித்தனர். இதை தொடர்ந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.