பள்ளிகளுக்கு ‘ அலர்ட்’! பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற தீவிரம் காட்டும் தலைமையாசிரியர்கள்

0
43

பொள்ளாச்சி; மழையின் தாக்கம் தொடர்ந்து காணப்படுவதால், பள்ளிகளில் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள் ‘அலர்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. அதன்ஒரு பகுதியாக, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த இரு தினங்களாக, விடாது பெய்யும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதனை நிவர்த்தி செய்யும் வகையில், அரசுத்துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில், மாணவர்கள், ஜர்க்கின் அணிந்தும், குடை பிடித்தவாறும் பள்ளி, கல்லுாரி சென்று திரும்புகின்றனர்.

இந்நிலையில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க, தலைமையாசிரியர்கள் ‘அலர்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களும், மாணவர்களை பாதுகாப்பை உறுதி செய்ய, தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சைக்கிள் பயன்படுத்த வேண்டாம்

இது குறித்து, பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, நீர்நிலைகள் அமைந்துள்ள வழிப்பாதையில், மாணவர்கள் பள்ளிக்கு வருவதை மாற்றி, பாதுகாப்பான பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. அதிலும், சைக்கிள் பயன்படுத்த வேண்டாம் என, தெரிவிக்கப்படுகிறது.

மின் இணைப்புகள் சரியாக உள்ளதா, மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்தப்படுகிறது.

இருப்பினும், பாதுகாப்பு கருதி, தலைமையாசிரியர் அறை நீங்கலாக, பிற அறைகளுக்கான மின் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பழுதடைந்த கட்டடங்களில் மாணவர்கள் அமர தடை விதிக்கப்பட்டுள்ளது

பள்ளி வளாகத்தில் உள்ள நீர் தேக்க பள்ளங்கள், கழிவு நீர் தொட்டி, தரைமட்ட நீர் தேக்க தொட்டி பகுதிகளுக்கு செல்ல மாணவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அவ்வப்போது, வளாகம், கட்டட மேற்கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து, உடனடியாக அகற்றப்படுகிறது. பருவ கால மாற்றங்களால் மாணவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அதற்கேற்ப மருந்துகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு, மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.