பள்ளிகளில் கைவிடப்படுகிறதா ஆர்.டி.இ.,மாணவர் சேர்க்கை? காலதாமதமாவதால் போராட்டம் நடத்த முடிவு

0
1

தமிழகத்தில் 15 ஆண்டுகளாக, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில், எல்.கே.ஜி., யூ.கே.ஜி., வகுப்புகளில் சேர்க்கை வழங்கப்படுகிறது. இச்சேர்க்கை அறிவிப்பு ஏப்., 2வது வாரத்தில் வெளியிடப்பட்டு, மே மாத இறுதிக்குள் முடிவடையும்.

ஆனால் இந்தாண்டு இன்னும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்க இன்னும் இரு வாரங்களே உள்ளன.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ‘அறிவிப்பு தற்போது வரை வெளியாகாததால் சேர்க்கைக்கான, 80 சதவீத பணிகள் நிலுவையிலிருக்கின்றன. வரும் நாட்களில் அறிவிப்பு வெளியானால், 10 நாட்களில் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும். இது பெற்றோர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சுமையை ஏற்படுத்தும்’ என்றார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு, காத்திருப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் தலைவர் ஈஸ்சுவரன் அறிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆர்.டி.இ., சேர்க்கை இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இதனால், இந்த ஆண்டிற்கான திட்டமே நிறுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைக்கு பலமுறை கடிதம் அனுப்பியும், போராட்டம் நடத்தியும் பயனளிக்கவில்லை.

தற்போது, வழக்குப் போடுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதற்குமுன், கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.