பலத்த மழை; வீடு இடிந்து விழுந்தது

0
56

சுவர் இடிந்து விழுந்தது

மாண்டஸ் புயல் காரணமாக பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் குளிர்ச்சியான காலநிலை நிலவி வந்தது. இந்த நிலையில் இரவு ஆழியாறு பகுதியில் பலத்த மழை பெய்தது. மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சின்னாறுபதி மலைக்கிராமத்தில் மாயவன் என்பவரது வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக சுவர் விழுந்ததில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

இதன் காரணமாக கொட்டும் மழை மற்றும் பனிக்கு இடையே அவர், குழந்தைகளுடன் சிரமத்துடன் தூங்கினார். இதற்கிடையில் சின்னாறுபதி மலைக்கிராமத்தில் யானை சுற்றித்திரிந்ததால் அங்கு உள்ள மக்கள் விடிய, விடிய தூக்கம் இன்றி தவித்தனர். இதுகுறித்து நேற்று வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து அந்த வீட்டில் சுவர் விழுந்த பகுதியில் தற்காலிகமாக தகர சீட்டு வைத்து சீரமைப்பு பணி மேற்கொண்டனர்.

அடிப்படை வசதிகள்

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது:- சின்னாறுபதி, புளியங்கண்டி, நவமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் வீடுகள் மிகவும் மோசமான நிலையில்தான் உள்ளது. வீடுகள் அடிக்கடி விழுவதால் கடும் அவதிப்படுகின்றனர். மலைவாழ் மக்களுக்கு கான்கீரிட் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.ஆனால் எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. எனவே மலைக்கிராமங்களில் கான்கீரிட் வீடு மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.