பலத்த மழை நொய்யல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்கிறது

0
96

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த திடீர் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஆற்றில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்ந்ததால் வெள்ளலூர் தரைப்பாலம் மூழ்கியது.

பருவமழை

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக பெய்து உள்ளது. கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நேற்று திடீரென்று நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் பாய்ந்தது.

மேலும் சித்திரைச்சாவடி, குனியமுத்தூர் தடுப்பணை, புட்டுவிக்கி தடுப்பணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை உள்ளிட்ட தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். சிலர் நொய்யல் ஆற்றில் இறங்கி குளித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து கோவை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

குளங்கள் நிரம்பின

கோவையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்துள்ளது. கோவை நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள வேடப்பட்டி புதுக்குளம், கோளராம்பதி குளம், நரசாம்பதி குளம், குறிச்சி குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் அடித்த போதிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் நொய்யல் ஆற்றில் நேற்று வினாடிக்கு 710 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.

குளங்கள் அனைத்தும் நிரம்பி விட்டதால் நொய்யல் ஆற்று தண்ணீர் வேறு எங்கும் திருப்பி விடப்படவில்லை. இதனால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. தென்மேற்கு பருவமழை இந்த மாத இறுதியில் முடிய வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் உள்ள தடுப்பணைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். என்றார்.

தரைப்பாலம் மூழ்கியது

நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வெள்ளலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்ததப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வெள்ளலூர் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவதால் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். புதிய பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டு விட்டது. எனவே பொதுமக்களின் நலன் கருதி வெள்ளலூர் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.