காரமடை பகுதியில் பலத்த மழையால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. மேலும் வீட்டின் மீது தடுப்புச்சுவர் விழுந்து மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
பலத்த மழை
கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளியங்காடு, சீளியூர், தோலம்பாளையம், மருதூர், பெள்ளாதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை 1 மணி முதல் காலை 8 மணி வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கட்டாஞ்சி மலையில் இருந்து எருமைபள்ளம் வழியாக பாய்ந்தோடிய வெள்ளம் காரமடை குட்டை, பெள்ளாதி குளம் ஆகியவற்றை நிரப்பி தடுப்பணைகள் தாண்டி உபரி நீராக வெளியேறி செல்கிறது.
இது தவிர தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. விவசாய நிலங்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது.
போக்குவரத்து பாதிப்பு
தடுப்பணைகளில் இருந்து வெளியேறிய வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், அனைத்து வீதிகளும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெள்ளம் வடிந்த பிறகே போக்குவரத்து சீரானது.
காலை நேரத்தில் கொட்டிய மழையால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
படுகாயம்
இதற்கிடையில் பெள்ளாதி ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியை சேர்ந்த அகிலா(வயது 62) என்பவரது வீட்டின் மீது தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் இடிந்து விழும் நிலையில் இருந்த தடுப்பு சுவர்களை அகற்றினர்.