பறவைகளுக்கு உணவு அளிக்க அரசு பள்ளி வளாகத்தில் சிறு தானியங்கள் சாகுபடி-மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

0
50

சிறு தானியங்கள் சாகுபடி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெத்தநாயக்கனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை திறம்பட கேள் என்னும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மரபு விளையாட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியாக ஆண்டுதோறும் பள்ளி வளாகத்தில் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் துளசி உள்ளிட்ட மூலிகை செடிகளை வளர்த்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக மூலிகை செடிகளை சுற்றிலும் கம்பு, சோளம் போன்ற சிறு தானியங்களை சாகுபடி செய்து வளர்த்து வருகின்றனர். மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்து ஊக்கப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர் பாலமுருகன் கூறியதாவது:-

பறவைகளுக்கு உணவு

பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் தினமும் பறவைகளுக்கு மதியம் உணவு, தண்ணீர் வைத்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளிக்கு மாணவர்கள் வந்து பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது வழக்கம். இந்த ஆண்டு பறவைகளுக்கு தேவையான உணவுகளை சாகுபடி செய்ய மாணவ-மாணவிகள் திட்டமிட்டனர். இதற்காக தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் அனுமதி கேட்டனர்.

அனுமதி அளித்ததோடு அதற்கு தேவையான உதவிகளை செய்தோம். இதை தொடர்ந்து கம்பு, சோளம் போன்றவற்றை மாணவர்கள் சாகுபடி செய்து தினமும் பராமரித்து வருகின்றனர். இன்னும் ஒரு மாதத்தில் அந்த செடிகளில் பறவைகளுக்கு தேவையான கம்பு, சோளம் போன்ற தானியங்கள் தயாராகி விடும். பறவைகள் செடிகளில் இருக்கும் தானியங்களை சாப்பிட்டு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.