பயணிகள் நிழற்குடைகளைமீண்டும் அமைக்க வேண்டும்

0
92

கோவை-பொள்ளாச்சி இடையே உள்ள 4 வழிச்சாலையில் அகற்றப்பட்ட பயணிகள் நிழற்குடைகளை மீண்டும் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

4 வழிச்சாலை

கிணத்துக்கடவு வழியாக கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை கோவை, பொள்ளாச்சி உட்பட தென்மாவட்டங்களுக்கு செல்ல பிரதான சாலையாக இருந்து வருகிறது. 2017-ம் ஆண்டுக்கு முன்பு 7 மீட்டர் அகலத்தில் சாலை இருந்தது. இந்த சாலையின் இருபுறங்களிலும் பொள்ளாச்சி முதல் கோவை ஈச்சனாரி வரை நூற்றுக்கணக்கான மரங்கள் பசுமையாக காட்சி அளித்தன.

இந்த சாலையில் வாகன போக்குவரத்து நெருக்கடி அதிகரித்ததால் கோவை பொள்ளாச்சி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்டது. இந்த பணிகளின் போது கோவை-பொள்ளாச்சி இடையே சாலையின் இருபுறங்களிலும் இருந்த மரங்கள் அனைத்தும் வெட்டி அகற்றப்பட்டன. அதேபோல் ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், கோதவாடி பிரிவு, வேலூர் பிரிவு, ஒத்தக்கால் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

பயணிகள் நிழற்குடை

ரோட்டோரம் நின்றிருந்த மரங்களை வெட்டி அகற்றும் போது சமூக ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றப்படும் மரங்களுக்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நடுவோம் என்று உறுதி அளித்தனர். இந்தநிலையில் தற்போது கோவை-பொள்ளாச்சி சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை சாலையோரம் அகற்றப்பட்ட மரங்களுக்கு பதிலாக மாற்று மரங்கள் நடப்படவில்லை.

அதேபோல் கோவை-பொள்ளாச்சி இடையே பொதுமக்கள் பாதுகாப்பாக நின்று பஸ்சில் ஏற கூடிய பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்படவில்லை. இதனால் தற்போது இந்த சாலையில் பயணிகள் ரோட்டோரம் கால்கடுக்க நின்று மழை மற்றும் வெயிலில் சிரமம் அடைந்து கோவை, பொள்ளாச்சிக்கு பயணம் செய்து வருகின்றனர்.

மீண்டும் அமைக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவை-பொள்ளாச்சி சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் போது அகற்றப்பட்ட நிழற்கூடை அமைக்கப்படவில்லை. மரங்களை வெட்டும் போது மாற்று மரங்கள் நடுவோம் என்று நெடுஞ்சாலைத்துறையினர் கூறினார்கள். தற்போது சாலையின் இருபுறங்களிலும் மரங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் 4 வழிச்சாலையை ஆய்வு செய்து மரக்கன்றுகளை நடவும்ம், பயணிகள் நிழற்குடை இருந்த பகுதியில் மீண்டும் பயணிகள் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.