பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

0
149

கிணத்துக்கடவு பகுதியில் கோவை-பொள்ளாச்சி 4 வழிச்சாலையில் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால் அவர்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

கடும் பனிப்பொழிவு

கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

ஆனால் இரவு நேரங்களில் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் குளிர் காரணமாக அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் புற்கள், செடிகள் மீது வெள்ளை போர்வையை போர்த்தியதுபோல பனி படர்ந்து இருந்ததை காணமுடிந்தது

வாகன ஓட்டிகள் அவதி

கடும் பனிப்பொழிவால் கோவை-பொள்ளாச்சி இடையே 4 வழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். எனவே வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றதை காணமுடிந்தது. கோவை-பொள்ளாச்சி சாலையில் காலை 8.30 மணி வரை பனிமூட்டம் நிலவியது.