பந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் !

0
149

பந்தள ராஜ குடும்பமும் சபரிமலையும் !

the-role-of-pandalam-dynasty-in-sabarimala-temple

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் எழுதியதை தொடர்ந்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஊர்வலங்கள் போராட்டங்கள் என தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்தது. மெல்ல மெல்ல இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது, சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை ஐப்பசி மாதப் பூஜைக்காக திறக்கப்பட்ட பின்புதான். சபரிமலைக்கு வந்த பெண்களை போராட்டக்காரர்கள் நிலக்கல் பகுதியில் மறித்து அவர்களை திருப்பி அனுப்பினர். இதனையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் தகராறு ஏற்பட்டு தாக்குதல் சம்பவமும் நடைபெற்றது. ஆனாலும், பெண்கள் சிலர் சபரிமலைக்கு சந்நிதானத்துக்கு செல்லாமல் பக்தர்களின் எதிர்ப்பால் திருப்பி அனுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் கேரள அரசு, தேவஸம் போர்டு மற்றும் பந்தள ராஜ குடும்பத்தினரிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதால் சுமூகத் தன்மை ஏற்படாமல் இருக்கிறது. அனைத்து வயது பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, பந்தள ராஜ குடும்பத்தினர் தீர்ப்பு வந்த நாள் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவஸம் போர்டினால் கேரள அரசையும் எதிர்க்க முடியாது, பந்தள ராஜ வம்ச்ததையும் எதிர்க்க முடியாது என்பதால் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர் அதன் நிர்வாகிகள். இந்நிலையில் நேற்று சபரிமலை விஷயத்தில் தேவஸம் போர்டு எந்த முடிவையும் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்து இருந்தனர். இது தொடர்பாக முக்கிய முடிவுக்கான கூட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெற இருக்கிறது.

சரி, இதில் பந்தள ராஜ குடும்பத்தினர் யார் ? அவர்களுக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை பார்க்கலாம். புராணமும் வரலாறும் இணைந்து பரவலாக சொல்லப்படுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். சுவாமி ஐயப்பன் பந்தள மன்னர்களின் ராஜ வம்சத்தில் பிறந்திருந்தாலும் அவருக்கு ராஜ வாழ்க்கை பிடிக்கவில்லை. எனவே சபரி மலைக்கு சென்று இருந்து கொண்டார். எனினும் அவர் தந்தையின் ஆசைக்காக வருடத்தில் ஒரு நாள் மட்டும் இளவரசன் கோலம் சூடிக்கொள்வதாக தன் தந்தையிடம் தெரிவித்தார். அந்த சம்பிரதாயம் இன்றும் நடத்தப்பட்டு வருகிறது. ஐயப்பனின் தந்தை ராஜசேகரன் ஐயப்பனுக்காக சுத்த தங்கத்தினால் ஆன ஆபரணங்களை செய்து வைத்திருந்தார். அந்த ஆபரணங்கள் இன்றும் கேரளத்தில் உள்ள பந்தளம் அரண்மனையில் இருக்கிறது.

ஐயப்பன் பந்தளம் அரண்மனையில் வாழ்ந்ததாக வரலாறு. அரண்மனை என்றவுடன் பெரிய மாடமும் தூண்களும் இருக்கும் என்று எல்லோரும் நினைபோம். ஆனால் அந்த அரண்மனை அப்படி இல்லை. இரண்டு கேரள பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட ஒட்டு வீடுகள் தான். அங்கு தான்  ஐயப்பனின் ஆபரணங்கள் இப்போதும் இருக்கிறது. இந்த ஆபரணங்கள் மகர விளக்கு  பூஜை நடைபெறும் ஜனவரி 14 ஆம் தேதி சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆபரணங்கள் சபரி மலைக்கு கொண்டு செல்லும் போது ஐயப்பனின் தந்தை ஸ்தானத்தில் பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பிரதிநிதியாக மலைக்கு அனுப்பி வைக்கப்படுவார். ஐயப்பனின் ஆபரணங்கள் மூன்று பெட்டிகளில் இருக்கிறது. அதை தேர்வு செய்யப்பட்ட மூன்று பேர் மட்டுமே மலைக்கு சுமந்து செல்கின்றனர்.

பந்தளத்தில் இருந்து மலைக்கு செல்ல மூன்று நாட்கள் ஆகும். அவர்கள் அந்த ஆபரணப்பெட்டிகளை மூன்று நாட்களும் தலையில் சுமந்து செல்வார்கள். பந்தளம் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இருந்தாலும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் சபரிமலைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே செல்வர்கள். காரணம், தன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் அவர்களுக்கு மரியாதை செலுத்த எழுந்து நிற்க வேண்டியது வரும். அதனால் தவம் கலையும். எனவே ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தன்னை பார்க்க மலைக்கு வந்தால் போதும் என்று ஐயப்பன் தன் குடும்பத்தை கேட்டுக்கொண்டதாக வரலாறு. அதேபோல மகர விளக்கு பூஜை முடிந்த பின்பு ஜனவரி 20 ஆம் தேதி சந்நிதானத்தின் நடை சாத்தப்படும். அப்போது கோவிலின் மேல்சாந்தி, நடையை அடைத்து அதன் சாவியை சம்பிரதாயத்துக்கு பந்தள குடும்பத்திடம் கொடுப்பார்கள்.