புரட்டாசி மாதம் நிறைவு மற்றும் தீபாவளி பண்டிகை ஆகிய காரணங்களால் பண்ணைகளில் கறிக்கோழி கொள்முதல் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
கறிக்கோழி உற்பத்தி
தமிழகத்தில் பல்லடம், சுல்தான்பேட்டை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு, நாமக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சுமார் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகளில் தினமும் 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா கர்நாடகா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு(பி.சி.சி.) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்ய உற்பத்தியாளர்களுக்கு சராசரியாக ரூ.95 வரை செலவாகிறது. கடந்த 6-ந் தேதி ஒரு கிலோ கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ரூ.103(உயிருடன்) ஆக இருந்தது. இது 7-ந் தேதி ரூ.108, 13-ந் தேதி ரூ.109, 15-ந் தேதி ரூ.114 என உயர்ந்து வந்தது.
கட்டுப்படியான விலை
புரட்டாசி மாதம் தொடங்கிய 2 வாரம் மட்டும் கறிக்கோழி கொள்முதல் விலை உற்பத்தி செலவை விட குறைந்து இருந்தது. அதன்பிறகு கட்டுப்படியான விலை கிடைத்தது. தற்போது இன்னும் சில நாட்களில் புரட்டாசி மாதம் நிறைவடைய உள்ளது. மேலும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை வரவுள்ளது.
இதையொட்டி பல லட்சம் கறிக்கோழி சிறப்பு ஆர்டர் கிடைத்துள்ளது. இதன் காரணமாக கறிக்கோழி பண்ணை கொள்முதல் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தொழிலில் லாபம் கட்டுபடியாகும் அளவிற்கு கிடைத்து வருவதாலும் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, சில்லறை கடைகளில் ஒரு கிலோ கறிக்கோழி இறைச்சி கிலோ ரூ.220 முதல் ரூ.240 வரை விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.