கனமழை பெய்யும்போது பணி நேரத்தை குறைக்கக்கோரி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் வால்பாறை அருகே பரபரப்பு ஏற்பட்டது.
கனமழை
வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதன்படி வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மேலும் கடும் பனிமூட்டமும் நிலவியது.
தொடர் மழையால் நிரந்தர மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என சுமார் 350 பேர் தங்களுக்கு சம்பளம் இல்லாத ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும் என்று தோட்ட அதிகாரிகளிடம் கடிதம் கொடுத்தனர். மேலும் இனிவரும் நாட்களில் கனமழை பெய்யும்போது மதியம் 2.30 மணிக்கு மேல் பணி வழங்க கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
முற்றுகை போராட்டம்
இதற்கு, குரூப் மேலாளரிடம் கேட்டுத்தான் முடிவு சொல்ல முடியும் என்று தோட்ட மேலாளர் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் தொழிலாளர்கள், நாங்களே கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள குரூப் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறிவிட்டு கொட்டும் மழையிலும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குரூப் அலுவலத்தை முற்றுகையிட்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது தலைமையில் தொழிற்சங்கத்தினர், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, அக்காமலை வார்டு கவுன்சிலர் அன்பரசன், தாசில்தார் விஜயகுமார் மற்றும் வால்பாறை போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் குரூப் மேலாளர் கிருஷ்ணகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடன்பாடு
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கனமழை பெய்யும்போது தொழிலாளர்கள் மாலை 5 மணி வரை செய்ய வேண்டிய பணியை மதியம் 2.30 மணிக்கே முடித்து கொள்ளலாம், அதற்கு மேல் பணி செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது என்று தொழிற்சங்கத்தினர் பேசி நிர்வாகத்துடன் உடன்பாடு ஏற்படுத்தினர். இதையடுத்து தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அக்காமலை எஸ்டேட் தொழிலாளர்கள் தங்களது பணி உடையுடன் 4 கிலோ மீட்டர் தூரம் மழையில் நடந்து வந்து கருமலை எஸ்டேட் குரூப் அலுவலகத்தில் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.