பணி நிரந்தரம் அறிவிக்க வேண்டும்: பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை

0
5

கோவை; பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, 110 விதியின் கீழ், முதல்வர் அறிவிக்க வேண்டும் என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது:

பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து, இம்முறை இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பு வரும் என, எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் பணி நிரந்தரம் செய்து அறிவிக்கவில்லை. இதனால் பகுதிநேர ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளன

ஆசிரியர்களின், 12 ஆயிரம் குடும்பங்கள், 12 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளத்தில், அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாமல் கஷ்டப்படுகின்றனர். ஆசிரியர்களின், 14 ஆண்டுகள் பணி பிரச்னைகளுக்கு, பணி நிரந்தரம் செய்தால் மட்டுமே முழு தீர்வு கிடைக்கும்.

எனவே, இந்த பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கியுள்ள 46 ஆயிரத்து 767 கோடி நிதியில் இருந்து முதல்வர் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும். இந்த பணி நிரந்தர அறிவிப்பை முதல்வர், 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.