‘பட்டியலினத்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க ஸ்டாலின் முன்வருவாரா?’

0
88

கோவை: பா.ஜ.,- எம்.எல்.ஏ., வானதி அறிக்கை: ஜனசங்க காலம் முதல் டாக்டர் அம்பேத்கரை போற்றி வருகிறது, பா.ஜ., அவர் மீது உண்மையான மரியாதை இருந்தால் பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, தி.மு.க., துணை முதல்வர் ஆக்க வேண்டும். இதை செய்வாரா முதல்வர் ஸ்டாலின்.

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசியதை திரித்து, வழக்கம்போல அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் காங்., – தி.மு.க., உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இது, கடும் கண்டனத்திற்குரியது. டாக்டர் அம்பேத்கரை தேர்தலில் தோற்கடித்தது காங்.,தான்.

1983ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., வளாகத்தில், அம்பேத்கர் சிலையை, பாரதிய மஸ்துார் சங்கம் நிறுவியது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி தலைமையில், ஆட்சி அமைந்த பின், அம்பேத்கர் பிறந்த இடம், மறைந்த இடம், வாழ்ந்த இடம் என, அவர் தொடர்புடைய ஐந்து இடங்கள், பிரம்மாண்ட நினைவிடங்களாக மாற்றப்பட்டுள்ளன.

அம்பேத்கரை உண்மையிலேயே மதிப்பவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்க வேண்டும். பட்டியலினத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை, ஜனாதிபதிகளாக ஆக்கியது பா.ஜ., அரசு. இப்போது, பழங்குடியின பெண்மணியை குடியரசுத் தலைவராக்கியுள்ளது.

ஆனால், அமித் ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின். பட்டியலினத்தைச் சேர்ந்தோர் ஒருவரை துணை முதல்வராக்காமல் தன் மகன் உதயநிதியை ஆக்கியது ஏன்? இதற்கெல்லாம் பட்டியலின மக்கள் பாடம் புகட்டுவர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.