பட்டா இல்லாத குடும்பங்கள்; அதிகாரிகள் கள ஆய்வு

0
12

அன்னுார்; வீட்டு மனை பட்டா இல்லாத குடும்பங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

உங்கள் ஊரில், உங்களைத் தேடி’ திட்டத்தில், கடந்த 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் அன்னுார் தாலுகாவில் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் பங்கேற்று மனுக்கள் பெற்றனர்.

இதில் கஞ்சப்பள்ளி ஊராட்சி, தாசபாளையம் கிராமத்தில் இருந்து சமூக ஆர்வலர் சதீஷ்குமார் தலைமையில் பல குடும்பத்தினர் மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

இதில், ‘தாசபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள 150 குடும்பங்களில் 102 குடும்பங்களுக்கு மட்டும் வீடு உள்ளது. மீதமுள்ள 48 குடும்பங்கள் குடிசை வீடுகளிலும், ஒரே வீட்டில் இரண்டு குடும்பமாகவும் வசித்து வருகின்றனர்.

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் வருவாய்த்துறை அதிகாரிகள் தாச பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் சொந்த வீடு இல்லாத குடும்பங்கள் குறித்து ஆய்வு செய்தனர். அங்கு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காலனி மக்கள் கூறுகையில், ‘அதிகாரிகள் விரைவில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.