தொண்டாமுத்தூர்: கோவை புறநகரில், மீண்டும் பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும், சொலுயூஷனை பள்ளி மாணவர்கள் போதை பயன்பாட்டுக்கு பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும், போதை பவுடர், மது, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் பயன்பாடும், அதனால் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவு போதை பொருட்கள் பயன்படுத்தி, அடிதடி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசாரும், அவ்வப்போது, கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும், அறைகள் மற்றும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி, போதைப் பொருட்கள், வெட்டுக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்கின்றனர்.
மாணவர்களிடம் அதிக மதிப்புமிக்க போதைப்பொருட்கள் வாங்க பணம் இல்லாதபோது, குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஒயிட்னர், பஞ்சர் ஒட்ட பயன்படுத்தும் சொலுயூஷனை பயன்படுத்தி போதை ஏற்றிக்கொள்ளும் பழக்கம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அதிகம் காணப்பட்டது.
அரசு துறைகள் ஒருங்கிணைந்து, இந்த பொருட்களை விற்பனை செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. அதன்பின், இந்த வகை போதை பயன்பாடு குறைந்தது.
தற்போது, கோவையின் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், மீண்டும், பஞ்சர் சொலுயூஷனை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
கடைக்காரர்களும், எந்த கேள்வியும் கேட்காமல் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சொலுயூஷன் 10 மி.லி., 10 ரூபாய்க்கும், 50 மி.லி., 20 ரூபாய்க்கும் என, குறைந்த விலைக்கு கிடைப்பதால் வாங்கி பயன்படுத்துகின்றனர். மாணவர்களின் வாழ்வை ‘பஞ்சர்’ ஆக்கும், இந்த கலாசாரத்தை தடுக்க போலீசார், மருந்து கட்டுப்பாட்டு துறை, பள்ளிக்கல்வித்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு என, பல துறையினர் இணைந்து, மாணவர்களுக்கு இதுபோன்ற பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதோடு, மாணவர்களுக்கு, விழிப்புணர்வும் ஏற்படுத்த வேண்டும்.