பசுமை நான்கு வழிச் சாலை திட்டம்; கைவிட கோரி விவசாயிகள் மனு

0
17

அன்னுார்; பல நுாறு ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நான்கு வழி பசுமை சாலை திட்டத்தை கைவிடும்படி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

என்.எச்.948 புதிய நான்கு வழி பசுமை புறவழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள், குடியிருப்பு வாசிகள், காலி மனை உரிமையாளர்கள் சார்பில், நேற்றுமுன்தினம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு:

இந்த புதிய சாலை இரு மாநிலங்களை இணைக்கும் சாலையாக இருந்தாலும், வனப்பகுதி மற்றும் புலிகள் சரணாலயம் காரணமாக பகுதி நேரமே இந்த பாதையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும். மேலும் இது கட்டணச் சாலை என்பதால் பலரும் பயன்படுத்த முன்வர மாட்டார்கள்.

பசுமைவழிச் சாலை என்கிற பெயரில் பல நுாறு ஏக்கர் விவசாயத்தை அழிப்பது வேதனை ஏற்படுத்துகிறது. தற்போது சாலை பல இடங்களில் 10 மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடத்தில் நான்கு வழியாக சாலையாக மாற்றுவதற்கு இட வசதி உள்ளது.

எனவே, ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மத்திய அரசின் நெடுஞ்சாலை துறையால் கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை தமிழக அரசின் மாநில நெடுஞ்சாலைத்துறை கையில் எடுத்திருப்பது விவசாயிகளிடம் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்பகுதி மக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு புதிய பசுமை சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு தற்போது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.