பக்தர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை : வந்தே பாரத் ரயில் பெட்டியில் புகை

0
19

கோவை; வந்தே பாரத் ரயில் பெட்டியில் புகை வந்ததை தொடர்ந்து, கற்பூரம் ஏற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என, பக்தர்களுக்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில், வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து எஞ்சிய 6 நாட்களும் இயக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் காட்பாடி ரயில் நிலையத்தை தாண்டியதும், திடீரென ‘சி1’ பெட்டியில் தானியங்கி கதவுகள் அருகே புகை வெளியேற தொடங்கியது. தகவலறிந்து ரயிலில் இருந்த இன்ஜினியர் மற்றும் கேட்டரிங் அலுவலர் ஆகியோர், புகையை தடுத்து நிறுத்தினர்.

பயணிகளிடம் பேசிய ரயில்வே ஊழியர்கள், ‘ஷார்ட் சர்க்கியூட்’ காரணமாக சிறு புகை ஏற்பட்டுள்ளது. ஆனால், தீவிபத்து இல்லை எனத் தெரிவித்தனர். சேலம் ரயில்வே ஸ்டேஷனில், ஆய்வுக்கு பின் ரயில் புறப்பட்டது.

இந்நிலையில், சேலம் கோட்ட ரயில்வே, ரயில்களில் கற்பூரம், விளக்கு ஏற்றுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என எச்சரித்து உள்ளது.

‘ஆன்மிகப்பயணம் மேற்கொள்ளும் போது, ஒரு சில பயணிகள், ரயில்களில் கற்பூரம், விளக்கு ஏற்றும் செயல்களை பின்பற்றுகின்றனர். இதன் காரணமாக, தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. பாதுகாப்பான பயணம் கேள்விக்குறியாகிறது.

‘இதைக்கருத்தில் கொண்டு, பயணிகள் இத்தகைய நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் வெடிபொருட்களை எடுத்து செல்லும் பயணிகள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

‘ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், பயணிகள், 139 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்’ என, சேலம் கோட்ட ரயில்வே தெரிவித்துள்ளது.