நொய்யல் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்

0
7

கோவை, ஜன.12: நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில்,“கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் வழியாக செல்லும் நொய்யல் ஆறு, காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல்வேறு இடங்களில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கழிவு நீர் கலக்கப்படுகின்றன.

இதனால், ஆறு மாசு அடைந்து நிலத்தடி நீர், விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களுக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நொய்யல் ஆற்றின் கரைகளில் உள்ள மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டுள்ளார்.