இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக ஆனைமலையில் நெல் விவசாயம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
நெல் விவசாயம்
ஆனைமலை தாலுகாவில் தென்னை மற்றும் நெல் விவசாயம் பிரதானமாக உள்ளது. இப்பகுதியில் ஆண்டுக்கு 2 போகத்தில் நெல் பயிரிடப்படுகிறது. ஆழியார் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கும், பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த 2015-ம் ஆண்டு 1,100 ஹெக்டர் பரப்பளவில் நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது 550 ஹெக்டர் பரப்பளவில் மட்டுமே நெல் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தென்னை, இஞ்சி போன்ற மாற்று விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்.
படிப்படியாக குறைந்தது
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆனைமலை பகுதியில் நெல் விவசாயம் படிப்படியாக குறைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலையை சுற்றி உள்ள பகுதிகளில் 3 போகத்தில் நெல் விளைவிக்கப்பட்டது. தற்போது 2 போகம் விளைவிப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் நிரந்தர கொள்முதல் நிலையம் மட்டும் அரசு ஏற்படுத்தி கொடுத்தால் போதாது. நெல்லுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் மாற்றுப்பயிருக்கு மாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். மேலும் நெல்லில் சராசரியான மகசூல் கிடைத்தாலும் வேலையாட்கள் பற்றாக்குறை இடுபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் இழப்பு ஏற்படுவதாக விவசாயிகள் கவலைப்படுகிறார்கள். மேலும் சில சமயங்களில் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டம் போன்றவற்றால் நெல் பயிரிடும் பரப்பு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதற்கு மாற்றாக தென்னை விவசாயம் மற்றும் இஞ்சி போன்றவற்றை விளைவிக்க வேண்டிய நிலையிக்கு தள்ளப்பட்டு உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.