நெல் சாகுபடியில் அதிக மகசூல் விவசாயிகளுக்கு விருது

0
17

பொள்ளாச்சி : நெல் பயிர் விளைச்சலில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு பரிசு மற்றும் சான்று வழங்கப்படவுள்ளது.

கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் கிருஷ்ணவேணி கூறியதாவது:

நெல் பயிர் விளைச்சல் போட்டியில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து, அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, தமிழக அரசால் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கப்படுகிறது.

இதில், கோவை மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி, விண்ணப்பிக்கும் விவசாயி, குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பில், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருத்தல் வேண்டும்.

போட்டிக்கான பதிவு மற்றும் நுழைவு கட்டணமாக, 150 ரூபாய் பெறப்படுகிறது. நில உரிமையாளர் அல்லது குத்தகைதாரரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் சிறப்பு பரிசு மட்டுமின்றி, 7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கம் வழங்கப்படும்.

அதன்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் பயிர் சாகுபடி செய்திருத்தல் வேண்டும். இதில் கலந்து கொள்ள விரும்புவோர், 2025, மார்ச் 31ம் தேதிக்குள், பதிவு செய்து, கட்டணம் செலுத்த வேண்டும்.

அதேபோல, 2025, ஏப்., 15ம் தேதிக்குள் அறுவடை செய்ய வேண்டும். அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்கள், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் பதிவு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

அறுவடை நாளன்று, வேளாண் இயக்குனரால் ஒப்புதல் பெற்ற மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி குழுவினரால் இறுதி மகசூல் நிர்ணயம் செய்யப்படும்.

இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்