அன்னூர் : அவிநாசி — மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப்பணி திருப்பூர் மாவட்டத்தில் ஜரூராக நடக்கிறது; கோவை மாவட்டத்தில் பணி துவங்கவில்லை.
தமிழகத்தில் வடக்கு பகுதியான சென்னை, புதுச்சேரி, வேலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் செல்வதற்கு, பல ஆயிரம் வாகனங்கள் ஈரோடு, அவிநாசி, அன்னுார் வழியாக மேட்டுப்பாளையம் செல்கின்றன.
இத்துடன் கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் நீலகிரி மாவட்டம் செல்லும் வாகனங்கள் திருப்பூர், அவிநாசி, அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் செல்கின்றன. தினமும் இந்த வழித்தடத்தில், 25 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன.
எனினும் இந்த சாலை இரு வழி சாலையாக 23 அடி அகலம் மட்டுமே உள்ளது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு அமைப்புகள் இச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற கோரிக்கை விடுத்து வந்தன. இதையடுத்து தமிழக அரசு, திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கு முன்னதாக உள்ள ஆட்டையாம்பாளையத்தில் துவங்கி நம்பியாம்பாளையம், கருவலூர், நரியம்பள்ளி, கஞ்சப்பள்ளி, அன்னூர், பொகலூர் வழியாக மேட்டுப்பாளையம் வரை 38 கி.மீ., துாரத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டது.
தற்போது பணி உத்தரவு வழங்கப்பட்டு 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணி துவங்கி உள்ளது. இந்த சாலை விரிவாக்கத்தின்போது, 16 இடங்களில் தரைப் பாலங்கள் அகலப்படுத்தப்படுகின்றன. ஆறு இடங்களில் புதிய தரை பாலங்கள் கட்டப்பட உள்ளன.
பணிகள் விரைவாக நடக்க மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. சாலை அகலப்படுத்தப்படும்போது இருபுறமும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட உள்ளன.
சாலையின் மையப் பகுதியில் இருந்து இருபுறமும் தலா 28 அடி அகலத்திற்கு சாலை அமைக்கப்படுகிறது. இப்பணி திருப்பூர் மாவட்டத்தில் கருவலூர், நரியம்பள்ளி, அனந்தகிரி, சுண்டக்காமுத்தூர் பகுதிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.
அகலப்படுத்தப்படும் பகுதியில் இரண்டு அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டு அதில் ஜல்லி கொட்டப்பட்டு சமன்படுத்தப்படுகிறது. மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.
கோவை, திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களின் எல்லையான கஞ்சப்பள்ளி பிரிவு வரை திருப்பூர் மாவட்டத்தில் ஜரூராக வேலை நடந்து வருகிறது.
இதுகுறித்து அன்னூர் மக்கள் கூறுகையில், ‘அவிநாசி- – மேட்டுப்பாளையம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுவதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என ஆவலுடன் எதிர்பார்த்தோம்.
ஆனால், பணி உத்தரவு வழங்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பணி வேகமாக நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் கஞ்சப்பள்ளி பிரிவு ஊத்துப்பாளையம், குருகிளையம் பாளையம் ஆகிய இடங்களில் சில மரங்கள் மட்டும் வெட்டி அகற்றப்பட்டன. அதன் பிறகு எந்தப் பணியும் நடக்கவில்லை.
விரைவில் கோவை மாவட்டத்தில் உள்ள பகுதிகளிலும் சாலை விரிவாக்க பணியை துவக்கி, விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்’ என்றனர்.