நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல் ரவுண்டானா’வை அகலப்படுத்தினால் 80 சதவீத பிரச்னைக்கு தீர்வு காணலாம்

0
49

கோவை; கோவையில் அமைக்கப்படும் மேம்பாலங்களின், தற்போதைய நிலை குறித்த கலந்தாய்வு கூட்டம், நேற்று நடந்தது.

இந்திய தொழில் வர்த்தக சபை சார்பில், நடந்த இக்கூட்டத்துக்கு வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் லுந்த் தலைமை வகித்தார். தொழில்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறினர்.

அதில், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) மனு நீதி பேசியதாவது:

கோவை – அவிநாசி ரோடு மேம்பாலத்தை நீலாம்பூர் வரை நீட்டிக்க, திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கீழே பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள், அதற்கு மேல் ‘மெட்ரோ ரயில்’ செல்லும் வகையில், ‘டபுள் டக்கர்’ முறையில் வடிவமைக்க ஆலோசனை நடக்கிறது. நிலம் கையகப்படுத்தும் செலவு குறையும்.

லாலி ரோடு சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு, 2018ல் திட்டமிடப்பட்டது. ஒருபுறம் வேளாண் துறை, இன்னொருபுறம் வனத்துறைக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அரசு துறைகளுக்குச் சொந்தமான நிலத்தை இன்னொரு துறைக்கு வாங்குவது சிரமம்

நிலங்களை அளந்து, நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. ஆண்டுகள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை.

உப்பிலிபாளையம் ரவுண்டானாவை அகலப்படுத்துவதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை இரு ஆண்டுகளாக கூறி வருகிறது; இந்தாண்டும் நிதி ஒதுக்கப்படவில்லை. ‘ஜூலை மாதத்துக்குள் நிதி ஒதுக்காவிட்டால், மாநில நெடுஞ்சாலைத்துறை சிறப்பு திட்டங்கள் பிரிவினர் செய்யட்டும்; என்.ஓ.சி., மட்டும் கொடுங்கள்’ என, சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில், கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது நான்கு புறமும் ரவுண்டானாவை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை, 20 கோடி ரூபாய் கேட்டு, திட்ட அறிக்கை அனுப்பியது. சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதால், நிலுவையில் இருக்கிறது.

50 லட்சம் ரூபாயில் அகலப்படுத்தும் வகையில், திட்ட அறிக்கை கொடுத்திருக்கிறோம்; மூன்று அல்லது நான்கு மாதங்களில் அமைத்து விடலாம்; 80 சதவீத பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

கலெக்டர் கடிதம் கொடுத்து, நெடுஞ்சாலைத்துறை செயலர் உத்தரவிட்டால், மாநில நெடுஞ்சாலைத்துறையால் செயல்படுத்த முடியும் என கூறியுள்ளனர்.

கோவையில் உள்ள அனைத்து சிக்னல்களையும் அகற்ற திட்டமிட்டுள்ளோம்; இதுவரை, 30 சிக்னல்கள் அகற்றப்பட்டு உள்ளன. நிலம் கையகப்படுத்தாமல், அரசுக்கு சொந்தமான இடங்களை மிகச் சரியாக பயன்படுத்தினால், பல பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மேம்பாலங்கள் மட்டுமே தீர்வாகாது. இவ்வாறு, அவர் பேசினார்.

இந்திய தொழில் வர்த்தக சபை துணை தலைவர் நடராஜன் நன்றி கூறினார்