நீர் வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

0
85

நீர் வீழ்ச்சிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்

கனமழை

வால்பாறை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சோலையாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோலையாறு அணை 59-வது நாளாக முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது. வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கடுமையான குளிர், பனிமூட்டம் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

நிரம்பி வழியும் அக்காமலை அணை

வால்பாறையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை அவ்வப்போது விட்டு, விட்டு கனமழை பெய்தது. இதனால் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்தை ஏற்படுத்தி தரும் கருமலை ஆறு, நடுமலை ஆறு ஆகியவற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வால்பாறை பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளக்கும் அக்காமலை தடுப்பு அணை நிரம்பி, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும் கருமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி மற்றும் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சோலையாறு அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,965 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின்நிலையம்-1 இயக்கப்பட்டும், சேடல்பாதை வழியாகவும் பரம்பிக்குளம் அணைக்கு 2,038 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 161.45 அடியாக இருந்து வருகிறது.

மழையளவு

வால்பாறை பகுதியில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மேல்நீராரில்-39 மி.மீ. மழையும், சோலையாறு அணையில்-40 மி.மீ. மழையும், கீழ்நீராரில் 18 மி.மீ. மழையும், வால்பாறையில் 32 மி.மீ. மழையும் பதிவானது.

இன்று (வியாழக்கிழமை) ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மலையாள மக்கள் வீட்டின் முன்பு அத்தப்பூ கோலம் போடுவது வழக்கம். ஆனால் வால்பாறை பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் வால்பாறையில் வசிக்கும் கேரள மக்கள் அத்தப்பூ கோலம் போட முடியவில்லை. இதனால் அவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.