நீதியை தீர்மானிக்கும் சாதியும் அதிகாரமும்-முகமது சபி

0
107

ஹைதராபாத்தில் பிரியங்காவின் கூட்டு பலாத்கார கொலை நிகழ்வையொட்டி, நடத்தப்பட்ட என்கவுண்டர் குறித்து விவாதங்கள் தொடர்ச்சியாய் நடந்து கொண்டிருக்கின்ற வேளையில், மத்திய சட்ட அமைச்சர் தேவிபிரசாத் பாலியல் குற்றங்களுக்கு விரைந்து வழக்குகளை நடத்தி 6 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என, அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன், எனச் சொல்லி இருக்கிறார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை இந்தியாவில் எந்தப் பெண்ணுக்கும் பிரியங்காவிற்கு நடந்த கொடூரம் நடக்கக்கூடாது, என்று உருக்கமாக பேசியிருக்கிறார். இருவர் கருத்தும் வரவேற்க்கக் கூடியதே மாற்றுக்கருத்தில்லை.

கடந்த 11 மாதத்தில் மாதங்களில் 86 கற்பழிப்புகள் 185 பாலியல் வழக்குகள் என பெண்கள் வாழத்தகுதியற்ற மாவட்டமாக பாரதிய ஜனதா கட்சியின் ஆளும் உ.பி.யின் உன்னாவ் மாவட்டம் தான் என, சமூக வலை தளங்களிலும், ஊடகங்களிலும் பேசப்பட்டு வரும் வேளையில், கூட்டு பாலியல் படுகொலைக்கு வழங்கப்பட்ட நீதி குறித்து நாம் ஆழமாக விவாதிக்க வேண்டி இருக்கிறது.

காஷ்மீரில் ஆசிபாவை சிதைத்து படுகொலை செய்தவர்களை விடுதலை செய்யக் கோரி அப்போது பாரதிய ஜனதா கட்சியினர் பெரும் ஊர்வலமாக சென்றனர்.ஆசிபாவுக்கு ந நீதி வேண்டி போராடிய பெண் வழக்கறிஞரை நீதிமன்றத்துக்குள் நுழைய விடாமல் முற்றுகையிட்டனர் பிஜேபியின் வழக்கறிஞர்கள். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

சில மாதங்களுக்கு முன் சென்னையில் ஒரு குழந்தையை சிதைத்து படுகொலை செய்த ஹரீஸ் என்பவர் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

திரைப்பட நடிகை பிரதியூஷா ஐதராபாத்தில் சித்தார்த்த ரெட்டி மற்றும் அவர் நண்பர்களால் கூட்டு பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை.
மாறாக பிரதியூஷா தற்கொலை செய்து கொண்டார் என வழக்கை முடித்து வைத்தது ஹைதராபாத் காவல்துறை.

இதைவிட மனதை விட்டு அகலாத கொடூரம், இப்போது ஒரு இளம் பெண்ணிற்கு நடந்த கொடூரம் தான். பல மாதங்களுக்கு முன் கூட்டு பலாத்காரத்திற்கு ஆளாகி நீதி கேட்டு தன் தந்தையோடு முதல்வர் அலுவலகம் வந்த அந்தப் பெண்ணின் தந்தை மர்மமாக இறந்து போனார், அவர் தாயார் திட்டமிட்டு லாரி விபத்தில் கொலை செய்யப்பட்டார், மிக்சமிருக்கின்ற இளம்பெண் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க வந்த போது அதே குற்றவாளிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொலைப் பின்னணியில் பிஜேபியின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங்கிற்கு தொடர்பு இருக்கிறது என்றும்,அந்தப் பெண்ணின் தந்தையாரை போலீசாரே அடித்து கொலை செய்தார்கள் என்றும் சந்தேகத்தை கூறிவருகின்றன, அந்தப் பெண்ணின் சமூகத்தினர். இப்போது வரை உன்னாவில் படுகொலைசெய்யப்பட்ட அந்தப் பெண்ணிற்கு நீதி கிடைத்தபாடில்லை.

மேற்சொன்ன சம்பவங்களையெல்லாம் தொகுத்துப் பாருங்கள், குற்றங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் எல்லோரும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மரித்துப்போன பெண்களுக்கு இப்போது வரை நீதி கிடைக்கவில்லை.

டெல்லியில் நிர்பயா கற்பழிப்பு வழக்கில் தொடர்புடைய 4 பேரில் 3 பேர் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் ஒருவர் உயிரோடு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நிர்பயாவுக்கு ஓரளவு நீதி கிடைத்திருக்கிறது.

சென்னையில் சுவாதி படுகொலை செய்யப்பட்டபோது அதில் தொடர்புடையவர் காவலர்களின் பாதுகாப்பில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்பட்டது.இப்போது பிரியங்கா ரெட்டி எங்கு? எரித்துக் கொல்லப்பட்டாரோ அதே இடத்தில் என்கவுன்டர் செய்யப்பட்டு அதில் தொடர்புடைய நான்கு குற்றவாளிகளும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.பிரியங்கா ரெட்டிக்கு கிடைத்த நீதிக்கு தேசத்தில் பெரும்பாலனோர் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்ததற்கு காரணம் நீதிதுறை மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை தான்.

நிர்பயா, சுவாதி, பிரியங்கா, இந்த 3 பேர் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக தண்டிக்கப்பட்டு பலியnனவர்கள் மூவருக்கும் நீதி கிடைத்திருக்கின்றது.

தமிழகத்தில் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை காதல் வலையில் வீழ்த்தி, பாலியல் கோரத்தாண்டவம் ஆடிய வர்கள், தமிழகத்தின் ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகரின் உறவினர்கள். அவர்கள் மீது தொடுக்கப்பட்ட குண்டர் சட்டம் இப்போது விளக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கூட்டு பலாத்காரத்தில் செய்யப்பட்ட படுகொலைகளில் எல்லாம் நீங்கள் ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் உயர் சாதியாக இருந்து குற்றவாளிகள் தலித்தாக, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்தால் உடனே நீதி கிடைத்துவிடும். பாதிக்கப்பட்டவர்கள் தலித்துகளாக, பிற்படுத்தப்பட்டவர்களாக இருந்து, குற்றவாளிகள் உயர்சாதியினர் என்றால் நீதி கிடைக்காது. இதுதான் இதுவரை நடந்த நிகழ்வுகளை கொண்டு நாம் பெற்ற படிப்பினை.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நெருங்கிய உறவினராக இருந்தாலும் ஏன் தந்தையாக இருந்தாலும் நீதியாக இருங்கள் என்கிறது குர்ஆன்.என் மகள் திருடினாலும் அவள் கையை வெட்டுவதற்கு நான் உத்தரவிடுவேன் என்றார் நபிகள் நாயகம். ஆகவே தான் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி கற்பழிப்பு குற்றங்களுக்கு இந்தியாவில் அரேபிய நாட்டு சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றார்.அந்த அடிப்படையில் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் தரும் போது தான் குற்றம் புரிபவர்களுக்கு அச்சமும் அதன்வழியாக குற்றங்கள் குறைய வாய்ப்பும் இருக்கின்றது. அந்த தண்டனையை வழங்கும் அதிகாரத்தை காவல்துறை தன் கையில் எடுத்துக் கொள்வது ஆபத்தானது. இதுவரை நடத்தப்பட்ட என்கவுன்டர்களை ஆய்வு செய்தால், 25 விழுக்காடு தவிர 75 விழுக்காடு அப்பாவிகளை தான் போலீசின் தோட்டாக்கள் தொலைத்து இருக்கும். ஏற்கனவே ஜாதி மத துவேஷத்தை கிடைக்கிறபோதெல்லாம் வெளிப்படுத்துகின்ற காவல துறையினரிடம் இந்த அதிகாரத்தை தந்தால் தலித்துகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகத்தான் போலீசின் தோட்டாக்கள் பாயும். இன்னும் நீதிக்காகவும், ஒடுக்குமுறைக்கு எதிராகவும், போராடுபவர்களை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு காவல்துறை ஆட்சியாளர்களின் கருவியாக மாறும்.

எனவே இவ்வகையான கொடூர குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைத்து குறைந்த காலகட்டத்திலேயே விரைவான விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு நீதித்துறை வழியாகத்தான் மரண தண்டனை தரப்பட வேண்டும். தேசத்தில் கூட்டுபாலியல் வன்முறைக்கு உள்ளாகி கொலை செய்யப்படுகின்ற குற்றங்களில் தொடர்புடையவர்கள் சரி, கொலை செய்யப்பட்டவர்களின் சரி, இருவரின் சாதியும் மதமும் கணக்கில் கொள்ளப்படாமல், குற்றவாளிகள் பெரும் பணமும் அரசு பதவிகளையும் வைத்துக்கொண்டு எந்த அதிகாரத்தில் இருந்தாலும் அவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்.

நம் வீட்டிற்குள் ஊடுருவி விஷமாய் வழிந்து கொண்டு இருக்கின்ற தொலைக்காட்சி, கைபேசி சினிமா, மற்றும் அச்சு ஊடகங்கள் நம் குழந்தைகள் மனங்களில் வக்கிரத்தை நிரப்பிக் கொண்டிருக்கின்றன, இதிலிருந்து நம் குழந்தைகளை தற்காத்து, பெண்கள் என்றாலே அவர்கள் வெறும் சதையாக பார்க்கிற மனோபாவத்தை ஆண் குழந்தைகளிடமிருந்து அகற்ற வேண்டிய பொறுப்பும், அதேவேளை பெண் குழந்தைகளை தொடர்ச்சியாக கண்காணித்து, பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

சிறு வயதில் இருந்து, தன்னை தற்காத்துக் கொள்கிற பக்குவத்தை அடைகிறவரை, நம் குழந்தைகள் தவறான திசைவழியில் பயணித்து விடக்கூடாது என்பதில் நாம் கவனத்தோடும், பொருப்போடும், இருக்க வேண்டிய சமூகச்சூழல் இப்போது நிலவுகிறது.

அரசும் நீதித்துறையும், சமமான, விரைவான, நீதியை வழங்கும் பட்சத்தில் நீதித்துறை நீதான மக்களின் நம்பிக்கை உறுதிபெறும். இந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் , அடுத்த தலைமுறைக்கு இந்த சமூகத்தை பாதுகாப்பாக படை மாற்றம் செய்ய முடியும்.