நீதித்துறை கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கப்படாமல் முடக்கம்

0
7

கோவை; கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கோவை மத்திய சிறை வளாகத்தில், கூடுதலாக புதிய நீதிமன்ற வளாகம் அமைக்க, வக்கீல் சங்கம் மற்றும் நீதித்துறை சார்பில், 30 ஏக்கர் ஒதுக்கீடு செய்யகோரி, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறை வளாகத்தில் செம்மொழி பூங்காவுக்கு இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால், கூடுதல் நீதிமன்ற வளாகம் கட்டுவது தொடர்பான கோரிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவையில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகள் வசதிக்காக, ரேஸ்கோர்சில் பழைய மாஜிஸ்திரேட் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிதாக, 16 வீடுகள் கொண்ட மூன்றடுக்கு மாடியும், ரெட்பீல்டில் 14 வீடுகள் கொண்ட அடுக்கு மாடியும் கட்டுவதற்கு, 2014ல் திட்டமிடப்பட்டது.

இதற்காக முதல் கட்டமாக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2017 ல், கட்டுமான பணிகள் நடந்து வந்தது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் தொடர்ந்து பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், கூடுதலாக, 16.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் தாமதிப்பதால் கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டுகளாக முடங்கி கிடக்கிறது.

கோவை கோர்ட் வளாகத்திலுள்ள, 150 ஆண்டு பழமையான கட்டடம், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு, அவற்றை புனரமைக்க, ஒன்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த கட்டடத்திலுள்ள ஒன்பது கோர்ட்கள் செயல்பட மாற்று இடம் கிடைக்காததால், இத்திட்டம், கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கோவை, கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள குதிரை வண்டி கோர்ட் வளாகத்தில், 12 நீதிமன்ற அறை கட்டுவதற்கு, 54.96 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்தாண்டு நவம்பரில் அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக, 4.5 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டது. ஆனால், புதிய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.