நீட் தேர்வு
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நேற்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் புலியகுளம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, கண்ணம்பாளையம் கே.ஐ.டி.- கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, அன்னூர் நவபாரத் நேஷனல் பள்ளி, சூலூர் ஆர்.வி.எஸ். கலைக்கல்லூரி, ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம், மேட்டுப்பாளையம் சரஸ்வதி வித்யா மந்திர், குரும்பபாளையம் ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகிய 7 மையங்களில் நீட் தேர்வு நடந்தது.
கட்டுப்பாடுகள்
இந்த தேர்வில் பங்கேற்க வந்த மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில், மாணவர்கள் முழுக்கை ஆடைகள் அணியக்கூடாது, கலாசார, பாரம்பரிய உடை அணிந்தால் சோதனை செய்ய ஏதுவாக 2 மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்குள் வர வேண்டும். குறைந்த குதிகால் கொண்ட காலணிகள் அனுமதிக்கப்படும்.
ஷூக்கள் அணிய அனுமதி இல்லை. ஆடைகள் தொடர்பான தேசிய தேர்வு முகமையின் அறிவுரைகளை தேர்வர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இதுதவிர கைக்கடிகாரம், காப்பு, பெல்ட், தொப்பி, செல்போன், புளூடூத், ஹெட்போன், மைக்ரோ போன் மற்றும் அனைத்து வகை ஆபரணங்கள் போன்றவற்றை தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
5,100 பேர் எழுதினர்
கோவை மாவட்டத்தில் நீட் தேர்வை எழுத மொத்தம் 5,617 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 5,100 பேர் நேற்று நீட் தேர்வு எழுதினர். 517 பேர் தேர்வு எழுத வரவில்லை. கடும் கட்டுப்பாடுகள் காரணமாக மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு முன் கூட்டியே வந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
தற்போது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. எனவே அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்படி அனைத்து மாணவ- மாணவிகளும் முகக்கவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.
மாணவிகளுடன் வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே காத்து இருந்தனர். காந்திபுரம், சிங்கா நல்லூர் பஸ் நிலையங்களில் இருந்து நீட் தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் நீட் தேர்வு மையங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.