கோவை: சொத்து வரி, குடிநீர் கட்டணம், காலியிட வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்கள் மூலமாக, பொதுமக்களிடம் இருந்து, 577.71 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது, கோவை மாநகராட்சி நிர்வாகம். இதில், சொத்து வரியாக மட்டும், 394.81 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை சேவை கட்டணம், வரியில்லாத குத்தகை இனங்கள் என வகைகளில் வருவாய் ஈட்டுகிறது. மொத்தம், 5.87 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துபவர்களாக இருக்கின்றனர். நடப்பு நிதியாண்டில் (2024-25), மொத்த வரியினங்களாக, 766.43 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும்; நேற்று வரை, 577.71 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. சொத்து வரியாக மட்டும், 597.94 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். நேற்றைய தினம் வரை, 394.81 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; இன்னும், 203.13 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
மாநகராட்சி பகுதியில் மட்டும், 9,113 அரசு கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியாக, 26.79 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். இதுவரை, 13.31 கோடி வசூலாகியுள்ளது; இன்னும், 13.48 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதுதவிர, 106 கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பான வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இவ்வகையில், 24.77 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. இதில், 3.85 கோடி வசூலாகியிருக்கிறது; இன்னும், 20.92 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது.
கோவையில், 5.75 லட்சம் பேருக்கு குப்பை வரி விதிக்கப்பட்டுள்ளது. இவ்வகையில், 39.39 கோடி வசூலிக்க வேண்டியதில், 27.15 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இன்னும், 12.24 கோடி ரூபாய் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த, 2023-24 நிதியாண்டில், 90.45 சதவீதம் சொத்து வரி வசூலித்து சாதனை புரிந்ததால், மாநகராட்சிக்கு, 80 கோடி ரூபாய் மானியம் கிடைத்தது. நடப்பு (2024-25) நிதியாண்டு மார்ச், 31ல் முடிகிறது. ஒரு மாதமே இருக்கிறது. ஆனால், நேற்று வரை, 76.76 சதவீதமே வசூலிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு சதவீதத்தை எட்ட வேண்டுமெனில், இன்னும், 13.69 சதவீதம் வசூலிக்க வேண்டும். அதனால், வரி வசூலை அதிகரிக்க, பில் கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை விரைந்து செலுத்தச் சொல்லி, ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் பிரச்சாரம் செய்யப்படுகிறது.