நிதி நிறுவனம் நடத்தி ரூ.700 கோடி மோசடி : பணத்தை திரும்ப பெற 2 ஆயிரம் பேர் திரண்டனர் – கோவை கோர்ட்டில் பரபரப்பு

0
92

கோவை பீளமேட்டில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (யு.டி.எஸ்) என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத் தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 10 மாதங்களில் இரு மடங்கு பணம் தருவதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று பங்கு சந்தையில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு பல மடங்கு பணம் திருப்பி தரப்படும் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை நம்பி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். யு.டி.எஸ். நிறுவனத்துக்கு கோவை, சென்னை, மதுரை, ஈரோடு, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் 16 இடங்களில் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டன.
இந்த நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பலர் முதலீடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதல் முதலீடு செய்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே அந்த நிதி நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்து கோடிக்கணக்கான ரூபாயை முடக்கியது. இதுகுறித்து முதலீட்டுதாரர்கள் புகார் அளிக்காத நிலையில் கோவை மாவட்ட பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் தாமாக முன்வந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரமேஷ் மற்றும் பங்குதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் யு.டி.எஸ். நிறுவனத்தில் 70 ஆயிரம் பேர் முதலீடு செய்திருப்பதும், மொத்தம் ரூ.700 கோடி மோசடி செய்யப்பட்டதும் தெரியவந்தது. இதற்கிடையில் யு.டி.எஸ். நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் முதலீட்டுதாரர்களுக்கு பணம் கொடுக்க தயாராக இருப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிட்டி அமைக்க கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டுதாரர்க ளுக்கு யு.டி.எஸ். நிறுவனத்திடம் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக கோவை சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலக வளாகத்தில் தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட முதலீட்டுதாரர்கள் இந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.
அதன்பேரில் முதல்நாளான கடந்த 9-ந் தேதி 300 பேர் வந்து படிவங்களை கொடுத்தனர். 2-ம் நாள் 500 பேர் கொடுத்தனர். 3-ம் நாளான நேற்று 2 ஆயிரம் பேர் திரண்டனர் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கே முதலீட்டுதாரர்கள் கோர்ட்டு வளாகத்தில் காத்திருந்தனர்.
காலை 10.30 மணிக்கு கோர்ட்டு திறந்ததும் முதலீட்டுதாரர்கள் வரிசையாக நின்று போலீசாரிடம் டோக்கன் பெற்றுக் கொண்டனர். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட படிவத்தில் முதலீட்டாளர் பெயர், முகவரி, முதலீடு செய்த தொகை ஆகியவற்றை பூர்த்தி செய்து அதற்கான ரசீது நகல், ஆதார் கார்டு நகலையும் இணைத்து கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் முதலீட்டுதாரர்கள் விண்ணப்பம் கொடுத்ததாக போலீசார் கூறினார்கள்.
இது குறித்து போலீசார் மேலும் கூறியதாவது:-
ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா கமிட்டியிடம் முதலீட்டுதாரர்கள் தனித்தனியாக படிவம் அளிக்க வேண்டும். மொத்தமாக அளிக்க கூடாது. தற்போது பூர்த்தி செய்து கொடுத்தவர்களின் படிவங்களை ஆய்வு செய்து அதன் பின்னர் பணம் கொடுப்பது குறித்து சம்பந்தப்பட்ட முதலீட்டாளர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும். எனவே பணத்தை இழந்தவர்கள் இந்த அலுவலகத்துக்கு வந்து படிவங்களை அளிக்கலாம்.
இந்த நிதி நிறுவனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்தவர்களும் உள்ளனர். ஒரு நகை வியாபாரி ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளார். மற்றொருவர் வீட்டை விற்று ரூ.50 லட்சம் முதலீடு செய்துள்ளார். அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் ஓய்வூதியதொகையை முதலீடு செய்துள்ளனர். இதில் போலீசாரும் அடக்கம்.
முதலீடு செய்து தொகையை போல 2 மடங்கு தொகை 10 மாதங்களில் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவித்ததை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பணத்தை செலுத்தியுள்ளனர். இதில் கேரளாவை சேர்ந்தவர்கள் தான் அதிகம். படிவங்களை அளிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் வரும் நாட்களில் இன்னும் நிறைய பேர் மனு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.