நான் நலமுடன் இருக்கிறேன் சினிமாதான் என் உயிர்: விக்ரம் உருக்கம்

0
83

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், ‘கோப்ரா’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க,  எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து உள்ளார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விக்ரம் உருக்கமாகப் பேசியதாவது:
சில நாட்களுக்கு முன்பு என் இதயத்தில் அசவுகரியமான உணர்வு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீட்டுக்கு திரும்பினேன். அதற்குள் சமூக வலைத்தளங்களில் விரும்பத்தகாத பல விஷயங்கள் நடந்தன. எனக்கு நெருக்கமான பலபேர் பதற்றத்துடன் நலம் விசாரித்தனர். இப்போது நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். 100 சதவீதம் நலமாக இருக்கிறேன். என் ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் அன்பும், ஆதரவும், ஆசியும் இருக்கும் வரை எனக்கு எதுவும் நடக்காது. எனக்கு 20 வயதில் விபத்து ஏற்பட்டது. அப்போது என் காலை அகற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், மன உறுதியுடன் போராடி அதிலிருந்து மீண்டு வந்தேன்.

 

சினிமாதான் என் உயிர். பல ஆண்டுகளுக்கு முன்பு டீ விளம்பரம் ஒன்றில் சோழ ராஜாவாக நடித்தேன். அதற்கு திலீப் என்றஇளைஞர் இசை அமைத்தார். இன்று ஆதித்ய கரிகாலனாக ‘பொன்னியின் செல்வன்’ என்ற படத்தில் நான் நடித்துள்ளேன். அப்போது திலீப்பாக இருந்தவர், இப்போது ஏ.ஆர்.ரஹ்மானாக மாறி இரண்டு ஆஸ்கர் விருதுகள் வென்றுள்ளார். நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளேன். நமக்குள் ஒரு கனவும், லட்சியமும் இருந்து கடினமாக உழைத்தால் மிகப்பெரிய உயரத்தை அடையலாம். நான் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகன். ‘கோப்ரா’ படத்துக்கு அவர் சிறப்பாக இசை அமைத்துள்ளார். படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் வெளியிடும் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி. இந்தப் படத்தில் எனக்கு 7 தோற்றங்கள் என்பதால், டப்பிங் பேசுவதில் வித்தியாசம் காட்டியுள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். உதயநிதி ஸ்டாலின், ஏ.ஆர்.ரஹ்மான், துருவ் விக்ரம், நிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிர்னாளினி ரவி, ரோஷன்  மேத்யூ, இர்ஃபான் பதான், தாமரை கலந்துகொண்டனர்.