ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பொள்ளாச்சி-கோட்டூர் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் வால்பாறை, ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து காணப்படும். இந்த நிலையில் சாலை குறுகலாக இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இதற்கிடையில் ஆக்கிரமிப்பு கடைகளும் முளைத்து உள்ளன.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று ரங்கசமுத்திரத்தில் இருந்து சமத்தூர் வரை சாலையின் இருபுறமும் இருந்த கடைகளை அகற்றினர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் பெயர் பலகைகள், விளம்பர பலகைகள், கடைகளை அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக கோட்டூர் ரோடு பரபரப்பாக காணப்பட்டது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
நான்கு வழிச்சாலை
பொள்ளாச்சி-கோட்டூர் சாலையில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் சமத்தூர் வரை ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தர்ப்பூசணி கடைகள், தள்ளுவண்டிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு சாலையை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
கோட்டூர் ரோட்டில் சூளேஸ்வரன்பட்டியில் இருந்து சமத்தூர் வரை 10 மீட்டர் அகலம் உள்ள இருவழிச்சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற 10.5 மீட்டராக அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மீண்டும் சாலை ஓரங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கடைகளை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.