கோவை; ”விண்வெளிக்கு சென்று திரும்பும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்துவதால் நிதியை மிச்சப்படுத்தலாம்; ஏற்கனவே செலவிடப்பட்ட தொகையில், மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும். நாசா ஒரு கிலோ எடையை விண்ணுக்கு அனுப்ப, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும். அதுவே தனியாரில், 1,000 அமெரிக்க டாலராக குறைகிறது. இதனால்தான் தனியார் அனுமதிக்கப்படுகின்றனர்,” என, நாசா விஞ்ஞானி நாச்சிமுத்து கோபால்சாமி தெரிவித்தார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘நாசா’வின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் ‘ஹீலியோபிசிக்ஸ்’ பிரிவு விஞ்ஞானி நாச்சிமுத்து கோபால்சாமி பங்கேற்றார்.
அவர் நமது நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
சூரிய வெடிப்புகள் மற்றும் விண்வெளி காலநிலை எவ்வாறு மக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கின்றன? அவற்றின் தாக்கங்களை குறைக்க என்ன வழி?
சூரியப் புயலால் ஏற்படும் பாதிப்புகள், பூமியில் உள்ள பகுதியை பொறுத்து அமையும். நிலநடுக்கம் ஏற்படும் பகுதி எனில், அங்குள்ள மின்சார கட்டமைப்பு குறித்து யோசிக்க வேண்டும். மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்தும் ‘கிரிட்’கள் சூரிய வெடிப்புகளால் எரிந்து போகும்.
துருவ பகுதிகளில், ‘அரோரா’ எனும் வெளிச்சம் ஏற்படும்; அது பாதிக்கப்படும். இப்புயலால் அணுக்கள் வீழ்ந்து, வாயுக்கள் அனைத்தும் அயனிகளாக மாற்றப்படும். இதனால், துகள்களின் ஆற்றல் பல லட்சம் மடங்கு அதிகரித்து அணுக்கள், ஓசோனுடன் வினை புரிந்து ஓசோன் குறையும்.
இதனால், மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதைப் புரிந்து கொள்வது மட்டுமே தீர்வு. சூரியனுக்கும், நமக்கும் இடையே உள்ள துாரத்தை பொறுத்து சூரிய புயலின் வேகத்தை கணக்கிட்டு அதை முன்கூட்டியே கண்டறிந்து தற்காத்து கொள்ள முடியும்.
இந்திய மாணவர்கள் ‘அஸ்ட்ரோபிசிக்ஸ்’ துறையில் ஆர்வம் காட்ட, அல்லது நாசாவில் பணியாற்ற என்ன செய்ய வேண்டும்? பள்ளி, கல்லுாரி பாடத்திட்டங்களில் இதுகுறித்த தெளிவு உள்ளதா; ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்த அவசியம் உள்ளதா?
இதுபோன்ற ஆராய்ச்சிக்கு, இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய மூன்றும் முக்கியம். இதில் தெளிவான அறிவு இருந்தால் போதும். சிறப்பு வகுப்பிலும் கற்றுத்தரப்படுகின்றன. இதற்கென பிரத்யேக பள்ளிகள் உள்ளன. இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி.,) உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளில் இதுகுறித்து போதிக்கப்படுகிறது. தற்போதுள்ள இயற்பியல் பாடத்திட்டங்கள் நன்றாகவே உள்ளன. சிறப்பு விண்வெளி அறிவியல் போன்ற ஒருசில சிறப்பு பாடங்கள் உள்ளன. அதுபோன்ற பாடத்திட்டங்களை வைக்கலாம். அனைத்து பாடத்திட்டங்களும் ஆன்லைனில் கிடைக்கின்றன.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சியில் அடைந்துள்ள நிலையை நாசா உட்பட சர்வதேச அமைப்புகள் எப்படிப் பார்க்கின்றன?
உலக நாடுகள் அனைத்தும் அவற்றை மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்கின்றன. ஏனெனில் சில பெரிய திட்டங்களை ஒரே நாடு மேற்கொள்ள முடியாது. பல நாடுகள் சேர்ந்து செய்யும்போது ஏராளமான திட்டங்களை நிறைவேற்ற முடியும். இதுபோன்ற முயற்சிகள், பாராட்டப்பட வேண்டியவை.
விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிகள் பள்ளி, கல்லுாரிகளில் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுகிறதா?
இந்தியாவில், இன்று பள்ளிகளில், விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது அதிகரித்துள்ளது. பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் மையம் அங்குள்ள விஞ்ஞானிகள் வாயிலாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வானியற்பியலின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.
நாசாவுக்கு இணையாக வேறெந்த நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் கோலாச்சுகின்றன?
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, நாசாவுக்கு இணையாக யாரும் இல்லை. ஆனால், சில துறைகளில் ஒரு சில நாடுகள் நாசாவை விட சிறப்பாக செயல்படுகின்றன. சில துறைகளில் சீனா, ஐரோப்பா ஆகியவை சிறப்பாக செயல்படுகின்றன.
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல் இந்தியாவில் தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகள் என்ன?
இந்தியாவில், ஏராளமான தனியார் நிறுவனங்கள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. விண்வெளித் துறையில் இந்தியாவில், 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. கடந்த, 2021ல் ஐ.ஐ.டி., சென்னையில் ‘ஸ்பேஸ் கான்க்ளேவ்’ நடத்தப்பட்டது. அதில் ஆசிய, பசிபிக் பகுதிகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்கள் அழைக்கப்பட்டு கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதன்படி, ஜப்பான், இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் இதற்கு வரவேற்பு உள்ளது.
எலான் மஸ்க்கின், 90 நாட்களில் செவ்வாய் கிரகத்துக்கு பயணம் என்ற திட்டத்தின் சாதக, பாதகங்கள் என்ன?
அதற்கான தொழில்நுட்பம் தயாராகி வருவதால், அதுகுறித்து இப்போது கணிக்க முடியாது.
விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் அங்கேயே அழிந்து போகும் நடைமுறை இருந்து வருகிறது. தற்போது ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இதற்கான அவசியம் என்ன? ஏன் அது முக்கியத்துவம் பெறுகிறது?
விண்வெளிக்கு சென்று திரும்பும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்துவதால் நிதியை மிச்சப்படுத்தலாம். அது தற்போது செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே செலவிடப்பட்ட தொகையில், மூன்றில் ஒரு பங்காக குறைக்க முடியும். நாசா ஒரு கிலோ எடையை விண்ணுக்கு அனுப்ப, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பிடிக்கும். அதுவே தனியாரில், 1,000 அமெரிக்க டாலராக குறைக்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இதை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
வேறு கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பது குறித்த ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது. நாசா இதற்கான முயற்சியில் எந்தளவுக்கு வெற்றி பெற்றுள்ளது?
இதுவரை, உறுதியாக கண்டறிய முடியவில்லை. ஆனால், பெரிய உயிர்மூலக்கூறுகள் இருப்பதாக, சில கோள்களில் கண்டறியப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் இதுபோன்ற மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், உறுதியாக உயிரினங்கள் இருப்பதாக கூற முடியாது. இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நாசாவின் புதிய விண்வெளி நிலைய கட்டுமானத்தில் இந்திய நிறுவனங்களின் பங்கு எந்தளவுக்கு உள்ளது?
உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டியது கட்டாயம். பெரிய திட்டங்களை செயல்படுத்தும் போது பிற நாடுகளின் பங்களிப்பு இன்றி அதை செயல்படுத்த முடியாது. எதிர்காலத்தில் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிக்கும். இதற்கு வாய்ப்பு அதிகம்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் என்ன தான் சிக்கல்?
அவர்களை எந்த விண்வெளி வாகனம் அழைத்து சென்றதோ, அதன் வாயிலாக
அவர்கள் திரும்பி வரஇயலவில்லை. அவர்களது பயணத்திட்டம் மாறிவிட்டது. அதனால் அவர்கள் திரும்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அவர்கள் மீண்டும் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.
நாசா கண்டுபிடித்துள்ள புதிய ஏழு இருண்ட வால்நட்சத்திரங்களால் ஏற்படும் விளைவுகள் என்னவாக இருக்கும்?
இயற்கையில் உள்ளவற்றை நாம் கண்டுபிடிக்கிறோம். இதனால், நமக்கு சாதக, பாதகங்கள் என்ன என, யோசிக்க முடியாது. இது இயற்கையை உணர்ந்து கொள்ள கூடிய கண்டுபிடிப்புகள். அண்டத்தில் பல விசயங்கள் உள்ளன. அதேபோன்று சிறிய வால்நட்சத்திரங்கள் உள்ளன. இது நமது சூரிய குடும்பத்தில் உள்ளவை. ஒரு விண்கல் நம்மை நோக்கி வருகிறது என்றால், அதை எப்படி விலகிச் செல்ல வைப்பது உள்ளிட்ட
ஆராய்ச்சிகள் நடக்கின்றன. அதேபோல், வளிமண்டலத்துக்குள் அது நுழையும் போது முழுவதும் எரிந்து விட்டால், பிரச்னையில்லை. அப்படியின்றி அது உள்ளே வந்தால் பாதிப்பு ஏற்படும். டைனோசர் உள்ளிட்ட விலங்குகள் அழிவுக்கு இதுபோன்ற விண்கல்லே காரணம்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் சர்வதேச நாடுகளுக்குள் தகவல் மாற்றம் நிகழ்கிறதா?
ஆம், சர்வதேச கருத்தரங்குகள் நடக்கும் போது முக்கிய தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. அமெரிக்க வானியல் சங்கம், சர்வதேச வானியல் ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் உள்ளன. இவற்றின் வாயிலாக அனைத்து கண்டுபிடிப்புகளும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
பருவமழை குறித்த தரவுகளை பெற வானிலை ஆய்வு மைய செயற்கைகோள்கள் போதுமான அளவில் உள்ளனவா?
போதுமான அளவு உள்ளன. செயற்கைகோள்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களை பெற்று குறிப்பிட்ட பகுதிக்கு எப்படி வானிலை இருக்கும் என்பதை கண்டறிய முடியும். ஆனால், விண்வெளி குறித்த ஆய்வுக்குத்தான், போதுமான செயற்கைக்கோள்கள் இல்லை.
விண்வெளி ஆராய்ச்சிக்கு இந்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டுமா?
அதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தான் தெரிவிக்க வேண்டும். எங்களை பொறுத்தவரை விண்வெளி ஆராய்ச்சிக்கு அனைத்து நாடுகளும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்பதே. தற்போது ஆதித்யா எல்1 என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது மிகவும் அருமையான முயற்சி. தேவையான அளவு தகவல்கள் கிடைக்கப் பெற்று வருகிறது.
நாசாவை பொறுத்தவரை, 50க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவை தரும் தகவல்களை எடுத்தே பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மேற்கொள்கின்றன. இந்தியா அதிகளவில் நிதியை முதலீடு செய்யும் போது, நாளை இந்திய தகவல்களை பிறர் எடுத்து ஆராய்ச்சி செய்யலாம்.
ஆய்வில் சந்திரனுக்குமுக்கியத்துவம் வழங்கப்படுகிறது. சூரியனுக்கு எப்போது முக்கியத்துவம் அளிக்கப்படும்?
சந்திரனின் நடைமுறை பயன்கள் அதிகம். பூமிக்கு மிக அருகில் உள்ளது. சில மின்காந்த அலைகளை நம்மால் ஆராய்ச்சி செய்ய முடியாது. பூமியின் மேற்பரப்பில் உள்ள அயோனோஸ்பியர், மிகக்குறைந்த அலைக்கற்றைகளை தடுக்கும். சந்திரனுக்கு சென்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்ய முடியும். இதுபோன்ற ஆராய்ச்சிக்கூடங்களை சந்திரனில் நிறுவ முயற்சிகள் நடந்து வருகின்றன.
சந்திரன் பாறையால் ஆனது. சூரியன் நமக்கு முக்கியம்; அது இல்லை என்றால் நம்மால் வாழமுடியாது. புனேவில், வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலை மையம் (ஐ.யு.சி.எ.எ.,) செயல்படுகிறது. இங்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. சூரியன் குறித்து படித்தால் பிற நட்சத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். சூரியனை படிப்பது முக்கியமானது.
அஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் உங்கள் முக்கிய பங்களிப்பாக நீங்கள் எதை கருதுகிறீர்கள்?
என்னுடைய கண்டுபிடிப்புகளில் எது சிறந்தது என, குறிப்பிட்டு சொல்ல முடியாது. என்னுடைய ஆராய்ச்சியில், ‘கனிபிளிசம்’ எனும் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதுகிறேன். கனிபிளிசம் என்றால் மனிதனை, மனிதன் சாப்பிடுவது என, அர்த்தம். அதுபோல் ஒரு சூரிய புயல் மற்றொரு சூரிய புயலுடன் சேர்வது கனிபிளிசம் எனப்படுகிறது. 2001ல் அதை கண்டுபிடித்தேன். அது தற்போது வரை பெரிய கண்டுபிடிப்பாக உள்ளது.
விண்வெளி அறிவியலின் எதிர்காலத்திற்கான உங்கள் கனவு என்ன?
உடனடி கனவு என்றால், சந்திரனில், ரேடியோ டெலஸ்கோப்பை நிரந்தரமாக ஏற்படுத்துவதே. அதற்கான ஒரு முயற்சி ஏற்கனவே கடந்த, பிப்., ல் மேற்கொள்ளப்பட்டது. அங்கு அனுப்பப்பட்ட டெலஸ்கோப் சிறிது நேரம் பணிபுரிந்தது. லேண்டரில் ஏற்பட்ட பிரச்னையால், சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், தேவையான தகவல்களை அந்த டெலஸ்கோப் வாயிலாக பெற்றோம். அதன், மேம்படுத்தப்பட்ட டெலஸ்கோப் ஒன்றை இன்னும் ஒரு சில ஆண்டுகளில், நிரந்தரமாக நிறுவ உள்ளோம். இது வெற்றி அடைய வேண்டும். அது என்னுடைய கனவு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.