நமக்கு நாமே குடிநீர் திட்டம்… பொதுமக்கள் தவம்! பவானி ஆறு அருகில் இருந்தும் கவனிப்பார் இல்லை

0
4

மேட்டுப்பாளையம்; சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள, ‘நமக்கு நாமே’ குடிநீர் திட்டம், எப்போது செயல்பாட்டுக்கு வரும் என, மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 17 ஊராட்சிகளில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியும் ஒன்று. இந்த ஊராட்சியில், 30க்கும் மேற்பட சிறிய கிராமங்கள் உள்ளன. மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், இந்த ஊராட்சி அமைந்துள்ளது.

திருப்பூர் குடிநீர் திட்டம், சூலுார், குத்தாரிபாளையம், கரட்டுமேடு ஆகிய நான்கு குடிநீர் திட்டங்கள் வாயிலாக, ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வீடுகளும், மக்கள் தொகையும் அதிகம் என்பதால், போதுமான அளவில், மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. சில குடியிருப்பு பகுதிகளுக்கு,10 நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளுக்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும், குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. பவானி ஆறு அருகே இருந்தும், போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஊராட்சி தலைவர் விமலா, தலைவராக இருந்த போது, நமக்கு நாமே திட்டத்தில், ஒரு கோடியே, 40 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இத்திட்டத்துக்கு தண்ணீர் எடுக்க, வெள்ளிப்பாளையம் சாலையில், பவானி ஆற்றில் வட்டக் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

அதில், மின் மோட்டாரும் பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் இரண்டு ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டன. ஆனால் இன்னும் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. நமக்கு நாமே குடிநீர் திட்டம், எப்போது நடைமுறைக்கு வரும் என, பொதுமக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மின் இணைப்புக்கு காத்திருப்பு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சி செயலர் பிரபுவிடம் கேட்டபோது, ”திட்டப் பணிகள் துவங்கியபோது, 20 ஹெச்.பி., மின் மோட்டார் இயக்க, மின்சார இணைப்பு பெறப்பட்டது. ஆனால், தற்போது, 60 ஹெச்.பி., மின்மோட்டார் இயக்க இருப்பதால், புதிய மின் இணைப்பு வேண்டி, மின்சார அலுவலகத்தில் பணம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் பொதுமக்களுக்கு, புதிய குடிநீர் திட்டத்தின் வாயிலாக, குடிநீர் வழங்கப்படும்,” என்றார்.