சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது- நடைபாதை வியாபாரிகள் பாதிப்பு
வால்பாறையில் கடும் பனிமூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
முழுக் கொள்ளளவில் சோலையாறு அணை
வால்பாறை பகுதியில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே புயல் காரணமாக மழை பெய்து வந்தது. அதனைத்தொடர்ந்து மே மாதத்தில் கோடை மழையும் பெய்தது. அதன் தொடர்ச்சியாக ஜூன் மாதத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த மழை காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீர் வீழ்ச்சிகளிலும் ஓடைகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த 10-ந் தேதி பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக விளங்கும் சோலையாறு அணை தனது முழு கொள்ளளவை தாண்டியது.
அதனை தொடர்ந்து மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது வால்பாறை பகுதியில் கடந்த 3 நாட்களாக மழை குறைந்தாலும், அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
வருகை குறைந்தது
தொடர்ந்து பெய்த கனமழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக வால்பாறை பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் வால்பாறை பகுதியில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. குறிப்பாக நல்லமுடி எஸ்டேட் பகுதி, கூழாங்கல் ஆற்றுப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் வராததால் நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியை ஒட்டியுள்ள தேயிலை தோட்ட பகுதிகளை தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்துள்ளது.
வால்பாறை பகுதியை பொறுத்தவரை அனைத்து நாட்களிலும் வந்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் தற்போது பெய்து வரும் மழையால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் குறைந்தளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.