கோவை செல்வபுரம் தங்கசாமி காலனியை சேர்ந்தவர் ரவிக் குமார் (வயது 45). நகைப்பட்டறை உரிமையாளர். இவருடைய பட்டறையில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாபன் (32) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், ரவிக்குமார் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி பாபனிடம் கம்மல்கள் செய்வதற்காக 150 கிராம் தங்க கட்டியை கொடுத்தார்.
உடனே அவரும் ஒருசில நாட்களுக்குள் கம்மல்கள் செய்து தருவதாக கூறினார். ஆனால் ஒரு மாதம் ஆகியும் பாபன் கம்மல்கள் செய்து கொடுக்க வில்லை. மேலும் அவர் வேலைக்கும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரவிக்குமார், பாபனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்-ஆப் என்று வந்தது. இதனால் ரவிக்குமார், பாபன் தங்கி இருந்த வீட்டுக்கு சென்று பார்த்தார்.
அந்த வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே அக்கம் பக்கத்தில் விசாரித்த போது அவர் வீட்டை காலி செய்துவிட்டு மேற்கு வங்காளத்துக்கு சென்றது தெரியவந்தது. இதனால் பாபன் தங்க கட்டியை மோசடி செய்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.7½ லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்வபுரம் போலீ சார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான பாபனை தேடி வருகிறார்கள்.