கோவை; கோவை மாநகராட்சி பகுதியில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், ஏராளமான இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அனுமதியின்றி, சட்டத்தை மீறி வைக்கப்படும் இவ்விளம்பர பலகைகளை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டாலும், நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல், மெத்தனமாக செயல்படுகின்றனர்.
சாலை சந்திப்புகள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் சாலைக்கு அருகாமையில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது. இதுதொடர்பாக, அரசு துறைகளுக்கு நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தல் வழங்கியுள்ளன. அதை மீறி, கோவை மாநகராட்சி பகுதியில், விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. நகரமைப்பு பிரிவினர் அவ்வப்போது அகற்றினாலும் மீண்டும் மீண்டும் வைக்கப்படுகின்றன. சமீபகாலமாக நகரமைப்பு அலுவலர்களின் அனுமதியோடு நகர் முழுவதும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக, கட்டடங்களில் மேற்பரப்பில் மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன. அதை பார்த்து கவனம் சிதறினால், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தாகி விடும். அதைப்பற்றி, நகரமைப்பு பிரிவினர் கவலைப்படுவதில்லை.
நஞ்சுண்டாபுரத்தில் மேம்பாலத்துக்கு அருகே உள்ள கட்டடம், ஹோப் காலேஜ் பாலத்தில் இருந்து வரதராஜபுரம் செல்லும் ரோட்டில் உள்ள கட்டடம், ப்ரூக்பீல்ட்ஸ் ரோட்டில் வருவோர் அவிநாசி ரோடு மேம்பாலத்துக்கு ஏறும்போது பக்கவாட்டு பகுதி, ஸ்டேட் பாங்க் ரோட்டில் எஸ்.பி., அலுவலகம் எதிரே, டெக்ஸ்டூல் பாலத்துக்கு அருகில் உள்ள கட்டடங்கள், அவிநாசி ரோட்டில் கோல்டுவின்ஸ் பகுதி, அவிநாசி ரோடு மேம்பாலத்தில் இருந்து கூட்ஸ் ஷெட் ரோட்டுக்கு திரும்பும்போது எதிரில் உள்ள கட்டடங்கள், வடகோவை மேம்பாலத்தில் இருந்து இறங்கி வரும்போது சிந்தாமணிக்கு
எதிரே உள்ள கட்டடம், தடாகம் ரோடு, செல்வபுரம் ரோடு, குறிச்சி குளக்கரைக்கு எதிரே உள்ள கட்டடம், ஆத்துப்பாலம் அருகே பெட்ரோல் பங்க் அருகே உள்ள கட்டடம் என அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் நகரமைப்பு அலுவலர் குமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்ட போது, ‘சில விளம்பர பலகைகள் வைக்க, மாநகராட்சியில் இருந்து அனுமதி தரப்பட்டிருக்கிறது’ என்றனர்.
ஆனால், எந்தவொரு விளம்பர பலகையிலும், மாநகராட்சி நகரமைப்பு பிரிவு வழங்கிய அனுமதி எண் குறிப்பிடப்படவில்லை. அனுமதி எண் இல்லை என்றால், அனுமதியற்ற விளம்பர பலகைகள் என கருதி, அவற்றை அகற்ற வேண்டும். சாலை சந்திப்புகள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்பும் வகையில் விளம்பர பலகைகள் வைப்பதற்கு அனுமதி வழங்க, மாநகராட்சிக்கு எவ்வித உரிமையும் இல்லை.
அதேபோல், தனியார் கட்டடங்களின் மேற்பரப்பில் விளம்பர பலகைகள் வைக்க, அக்கட்டடங்களின் உரிமையாளருக்கும் உரிமை இல்லை. வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், நகரமைப்பு பிரிவினர் அகற்றியாக வேண்டும். அவற்றை எடுக்காமல், மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் வேடிக்கை பார்க்கின்றனர். லஞ்சம் வாங்கிக் கொண்டு, நடவடிக்கை எடுக்காமல், மாநகராட்சி கமிஷனரை, நகரமைப்பு பிரிவினர் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”அனுமதி பெற்ற விளம்பர பலகைகளில், அனுமதி எண் குறிப்பிட வேண்டும். அனுமதி எண் இல்லாத விளம்பர பலகைகளை அகற்ற, நகரமைப்பு பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளேன்,” என்றார்.
பெயரளவுக்கு நடவடிக்கை
நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டபோது, ”சாலை எல்லையில் இருந்து, 1.5 மீட்டர் துாரத்தில் விளம்பர பலகைகள் வைக்கலாம். தனியார் கட்டடங்களில் வைக்கக் கூடாது என்கிற விதிமுறை இல்லை.ஆனால், மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். அனுமதியற்ற விளம்பர பலகைகளை, அகற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,” என்றார்.இதன்படி, என்.எச்.ரோட்டில் – 3, ஒண்டிப்புதுார் மேம்பாலம், துடியலுார், உருமாண்டம்பாளையம், பூசாரிபாளையம், கவுண்டம்பாளையம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, பேரூர் மெயின் ரோடு என, 10 இடங்களில் மட்டும், விளம்பர பலகைகளை நேற்று அகற்றியுள்ளனர்.