பொள்ளாச்சி நகராட்சியில் மூன்று வார்டுகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
மாநில தேர்தல் ஆணையம், நகர்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.அதன்படி, பொள்ளாச்சி நகராட்சியில், 7வது வார்டு கவுன்சிலர் ராஜினாமா செய்ததால் அந்த வார்டு காலியாக உள்ளது. 12, 21வது வார்டு கவுன்சிலர்கள் இறந்ததால் அந்த வார்டு காலியாக உள்ளது.
இந்த மூன்று வார்டுகளுக்கான இடைத்தேர்தல் நடத்தும் வகையில், வாக்காளர் பட்டியலை, நகராட்சி கமிஷனர் கணேசன் வெளியிட்டார்.
வார்டு, 7ல், ஆண்கள் – 662, பெண்கள் – 655, மற்றவர்கள் – 1 என, மொத்தம், 1,318 பேரும்; வார்டு, 12ல், ஆண்கள் – 927, பெண்கள் – 987 என, மொத்தம், 1,914 பேரும்; வார்டு,21ல், ஆண்கள் – 1,271, பெண்கள் – 1,413 என, மொத்தம், 2,684 பேரும் வாக்காளர்களாக உள்ளனர்.
வார்டு 7க்கான, ஓட்டுச்சாவடி மையமாக மகாலிங்கபுரம் பாரதிய வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியும்; வார்டு, 12க்கு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும்; வார்டு, 21க்கு, பாலகோபாலபுரம் வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளியும் ஓட்டுச்சாவடி மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கமிஷனர் கூறுகையில், ”கவுன்சிலர் பதவி காலியாக உள்ள வார்டுகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவித்த பின், தேர்தல் நடைமுறைகள் பின்பற்றப்படும்,” என்றார்.