நகராட்சியின் 50 நிபந்தனைகளால் நந்தவன நிர்வாகம் சீர்குலையும்’: ஹிந்து முன்னணி கண்டனம்

0
11

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நந்தவனம், நிர்வாகத்தை, நகராட்சி நிர்வாகம் சீர்குலைக்க முயற்சி செய்வதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான, கோவிந்தம்பிள்ளை மயானத்தில், மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்தின் சார்பில் நந்தவனம் செயல்படுகிறது. இங்கு இறந்தவர்களுக்கு கர்ம காரியம் செய்தும், திதி கொடுத்தும், அஸ்தி கரைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

நகராட்சி நிர்வாகம், இந்த நந்தவனத்தை பராமரிக்க, 18 நிபந்தனைகளை விதித்தது. அதன் அடிப்படையில், நந்தவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம், நகராட்சி அலுவலகத்தில், நந்தவனத்தை பராமரிக்க மூன்றாண்டுகளுக்கு அனுமதி வழங்கி, 50 நிபந்தனைகள் விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானங்களுக்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஹிந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் ராஜ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மேட்டுப்பாளையம் அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்தின், மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் நந்தவனத்தில் நடந்தது. இதில் நகராட்சி நிர்வாகம், 3 ஆண்டுகளுக்கு உரிமம் வழங்கி, விதித்த, 50 நிபந்தனைகள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது. இதற்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஆட்சேபனை தெரிவித்தனர்.

இந்த நந்தவனம் காசிக்கு இணையானது என கூறப்படுகிறது. அதனால் தினமும் நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள், நந்தவனத்திற்கு வந்து திதி கொடுத்தும், ஈமச்சடங்குகளை செய்தும் வருகின்றனர்.

தற்போது நகராட்சி கமிஷனர் நந்தவன வருமானத்தில், 25 சதவீதம் நகராட்சி நிர்வாகத்திற்கு தர வேண்டும் எனக் கூறியுள்ளார். இவ்வாறு செய்தால் வருகின்ற பொது மக்களிடம், கட்டணம் வசூல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தற்போது சேவை மனப்பான்மையுடன் கர்ம காரியங்கள் செய்யப்படுகின்றன.

கடந்த 21 ஆண்டுகளாக எவ்வித பிரச்னையும் இல்லாமல், நடந்துவரும் நந்தவனத்தின் நிர்வாகத்தை, சீர்குலைக்கும் முயற்சியில், நகராட்சி நிர்வாகம், 50 தீர்மானங்களை நிறைவேற்றி அனுப்பி உள்ளது. இதற்கு ஹிந்து முன்னணி கண்டனம் தெரிவித்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் செய்ய முடிவு செய்துள்ளது.

மேலும், 36 ஜாதி சங்கங்கள் நிர்வாகிகள், சங்கத்தினர் இணைந்து தொடர் போராட்டமாக கடை அடைப்பு மற்றும் பேரணிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோட்ட செயலாளர் அறிக்கையில் கூறியுள்ளார்.