த.வெ.க., ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்கவே மாட்டார்கள்: கோவையில் நடிகர் விஜய் பேச்சு

0
10

”த.வெ.க., ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்கவே மாட்டார்கள்,” என, அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகமான, த.வெ.க., பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது.

கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது:

த.வெ.க., வெறும் அரசியல் ஆதாயத்துக்காக துவக்கப்படவில்லை. சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதே நேரம் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கும் என்றால், எந்த ஒரு எல்லைக்கும் போக தயங்க மாட்டோம்.

மக்களை நேசி

நம் ஆட்சி ஒரு சுத்தமான ஆட்சியாக இருக்கும். நம் ஆட்சியில் ஊழல் இருக்காது; ஊழல்வாதிகள் இருக்க மாட்டார்கள். அதனால், எந்த விதமான தயக்கமும் இன்றி பூத் கமிட்டி முகவர்கள் தைரியமாக மக்களை சந்திக்கலாம்.

‘மக்களிடம் செல், அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்; மக்களுடன் வாழ், அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு; மக்களை நேசி; அவர்களுக்காக சேவை செய்’ என, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை கூறினார்.

இதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் ஊர், சிறுவாணி நீர் போல சுத்தமான ஆட்சியாக இது அமையும். இன்னும் உறுதியாக கூற வேண்டும் என்றால், த.வெ.க.,வின் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக இருக்கும்.

இதை மக்களிடம் எடுத்துச்சொல்ல வேண்டும். நீங்கள் பார்ப்பீர்கள், த.வெ.க., ஓர் அரசியல் கட்சி மட்டும் அல்ல. அது விடுதலைக்கான பேரணி என்பது தெரியும்.

நல்லதே நடக்கும்

அந்த வெற்றியை நாம் அடைய, உங்கள் செயல்பாடு தான் மிக முக்கியம். நீங்கள் தான் முதுகெலும்பு. அதை மனதில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.

 

‘ஓட்டு போடுவதை மக்கள் கொண்டாட்டமாக செய்யணும்’

விஜய் பேசுகையில், ”ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டு போடும் மக்களுக்கு, உதவியாக இருக்க வேண்டும். குடும்பமாக கோவிலுக்கு செல்வது போல், பண்டிகையை கொண்டாடுவது போல், நமக்காக குடும்பமாக ஓட்டுபோட வரும் மக்களும், அதை கொண்டாட்டமாக செய்ய வேண்டும். அப்படி ஒரு எண்ணத்தை, முகவர்களான நீங்கள் அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்,” என்றார்.