த.மு.மு.க.வினர் திடீர் சாலை மறியல்

0
47

கோவையில் த.மு.மு.க.வினர் திடீர் சாலை மறியல்

த.மு.மு.க. கட்சி கொடிகளை போலீசார் அகற்றியதை கண்டித்து அக்கட்சியினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொதுக்கூட்டம்

த.மு.மு.க. சார்பில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்யக்கோரி கோவை உக்கடத்தில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்காக உக்கடம் பைபாஸ் சாலை, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் த.மு.மு.க.வினர் தங்களது கட்சி கொடிகளை சாலையோரங்களில் கட்டினர். ஆனால் கட்சி கொடி கட்டுவதற்கு போலீஸ் அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் நேற்று மதியம் உக்கடம் பைபாஸ் சாலையோரம் கட்டப்பட்டிருந்த த.மு.மு.க. கட்சி கொடிகளை அகற்றினர். இதனால் த.மு.மு.க. நிர்வாகிகள் உக்கடம் பைபாஸ் சாலையில் உள்ள துணை மின்நிலையம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பேச்சுவார்த்தை

மறியல் குறித்து தகவல் அறிந்ததும் உக்கடம் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட த.மு.மு.க.வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து த.மு.மு.க.வினர் சாலை மறியலை கைவிட்டனர். போராட்டம் காரணமாக உக்கடம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.