ெதாழிலாளர் சம்பள நிலுவைத்தொகை பிரச்சினை குறித்து தோட்ட அதிபர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது அறிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் வால்பாறை அமீது வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தோட்ட தொழிலாளார்களுக்கு சம்பள நிலுவைத்தொகை வழங்க மறுக்கும் தேயிலை தோட்ட நிர்வாகங்களை கண்டித்து மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். இதனைத்தொடர்ந்து தோட்ட அதிபர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதன்படி வால்பாறையில் நேற்று முன்தினம் நடந்த பேச்சுவார்த்தையில் தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் திம்மையா, ரஞ்சித் (வுட்பிரியர்), ஆசிக் (டாடாகாபி), ராஜ்மோகன் (வாட்டர்பால்ஸ்) உள்ளிட்ட 7 தோட்ட நிர்வாகங்களின் பொது மேலாளார்கள் கலந்து கொண்டனர்.
தொழிற்சங்கங்கள் சார்பில் எனது தலைமையில் வினோத்குமார் (எல்.பி.எப்.), கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.), வீரமணி (அம்பேத்கார் தோட்ட தொழிலாளார் சங்கம்) உள்ளிட்ட 5 தொழிற்சங்கத்தினர் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம்.
சம்பள நிலுவை தொகை
பேச்சுவார்த்தையில் தேயிலை தோட்ட தொழிலாளார்களுக்கு தோட்ட நிர்வாகங்கள் சம்பள நிலுவைத் தொகையை வருகின்ற மாத சம்பளத்துடன் வழங்குவதற்கும், தொழில்வரி பிடித்தம் செய்வது உள்பட பல்வேறு பிரச்சினைகளை குறித்து பின்னர் பேசி முடிவெடுப்பது என முடிவு செய்யப்பட்டது. தோட்ட தொழிலாளார்கள் தொழிற்சங்கங்களுடன் சம்பள நிலுவை தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து போட்டப்பட்ட ஒப்பந்த படிவங்களை இன்றுக்குள் (வியாழக்கிழமை) தொழிற்சங்கத்திடம் கொடுக்க வேண்டும். அந்த படிவங்களை தொழிற்சங்கத்தினர் தோட்ட நிர்வாகங்களிடம் கொடுத்துவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பள நிலுவை தொகை 26 நாட்கள் வேலைக்கு சென்ற ஒரு தொழிலாளிக்கு ரூ.10 ஆயிரத்து 400 வரை கிடைக்கும். ஒரு குடும்பத்தில் பலர் வேலை செய்யும் பட்சத்தில் ஒரு குடும்பத்திற்கு ரூ.32 ஆயிரம் வரை கிடைக்கும். இதனால் அனைத்து தோட்ட நிர்வாகங்களும் சேர்ந்து தொழிலாளார்களுக்கு ரூ.10 கோடியே 40 லட்சம் வரை வழங்கவுள்ளனர்.
மறியல் போராட்டம் வாபஸ்
மேலும் இந்த சம்பள நிலுவைத் தொகை தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளார்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரசு தேயிலைத் தோட்ட கழகம் (டேன்டீ) தொழிலாளார்களுக்கு கிடைக்காது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தோட்ட அதிபர்களை கண்டித்துநடத்தப் போவதாக அறிவித்திருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அமீது அறிவித்துள்ளார்.