வால்பாறையில் தொடர் மழையால் தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் மின்தடையால் மக்கள் அவதி அடைந்தனர்.
தொடர் மழை
வால்பாறை பகுதியில் மீண்டும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சோலையாறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் 8-வது நாளாக சோலையாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது. மேலும் 7-வது நாளாக உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுதான் அதிக நாட்கள் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, கரையோர குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டு தோட்டங்களை சூழ்ந்தது. மேலும் சூறாவளி காற்று காரணமாக பகல் மற்றும் இரவு நேரத்தில் பலமுறை மின் வினியோகம் தடைபடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் தொடர் மழையால் பல்வேறு எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து கொண்டனர். இதுதவிர சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.
கரையோர பகுதிகளில் கண்காணிப்பு
சோலையாறு அணையில் இருந்து மின் நிலையம்-1 இயக்கப்பட்டு சேடல்பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு 2 ஆயிரத்து 798 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மின் நிலையம்-2 இயக்கப்பட்டு மதகுகள் வழியாக 1,768 கன அடி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்படுகிறது. மேல்நீரார் அணையில் இருந்து 1,408 கன அடி நீரும், கீழ் நீரார் அணையில் இருந்து 467 கன அடி நீரும் சோலையாறு அணைக்கு வருகிறது.
தொடர்ந்து வருவாய் துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர், போலீசார், தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கரையோர பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் உமாமகேஷ்வரி தலைமையில் பணியாளர்கள் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும், காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.