கோவை; கோவை மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறுவோருக்கு, சொத்து வரிக்கு வழங்குவதுபோல், புத்தகம் போட்டுக் கொடுக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் எந்தவொரு தொழில் நிறுவனம் நடத்தினாலும், மாநகராட்சியில் கட்டணம் செலுத்தி தொழில் உரிமம் பெற வேண்டும்.
இதில், 450க்கும் மேற்பட்ட தொழில்கள் வகைப்படுத்தப்பட்டு, உரிமக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘ஆன்-லைன்’ முறையில் விண்ணப்பிக்க வேண்டும். வார்டு சுகாதார ஆய்வாளர்கள் பரிசீலித்து, அத்தொழிலுக்கான கட்டணம் நிர்ணயிக்கின்றனர்
அதன் அடிப்படையில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினருக்கு, மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு முகாம் நடத்தி, தொழில் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சொத்து வரிக்கு கொடுப்பதுபோல், தொழில் உரிமத்துக்கும் புத்தகம் போட்டுக் கொடுத்தால், ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் செலுத்த முடியும் என, தொழில் துறையினர் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, சுகாதார ஆய்வாளர்களுடன் ஆலோசித்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், தொழில் உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை, புதுப்பிக்கும் முறை, ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகை, ஆன்-லைனில் புதுப்பிப்பது எப்படி என்பதை விளக்கி, உரிமத்துடன் புத்தகம் வழங்க அறிவுறுத்தினார்.