கற்பகம் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
கற்பகம் தொழில்நுட்பக்கல்லுாரியின், 14 மற்றும் 15வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி அரங்கில் நடந்தது. விழாவிற்கு, கற்பகம் கல்விக் குழுமத்தின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் மிஸ்டர் கூப்பர் பல்துறை நிறுவனத்தின் தொழில்நுட்பத் தலைவர் மோகன்பாபு பாலச்சந்திரன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
அவர் பேசுகையில், ”மாறிவரும் நவீன உலகிற்கு ஏற்ப, தொழில்நுட்பம் சார்ந்த அறிவை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலமே, போட்டி நிறைந்த உலகில் நம்மால் சாதிக்க முடியும்,” என்றார்.
கல்லுாரி முதல்வர் மணிமாறன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில், 2019 – 23, 2020 – 24ம் கல்வியாண்டில் பயின்ற, 418 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் கற்பகம் கல்விக் குழுமத்தின் அறங்காவலர்கள் தமயந்தி, கார்த்திக், முதன்மைச் செயல் அலுவலர் முருகையா, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்
பணி நியமன ஆணைகள் வழங்கல்
கோவைப்புதுார், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட என்.ஐ.எஸ்.எம்., சான்றளிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகர் ஹரிஷ், வெற்றிகரமான வாழ்க்கையை வடிவமைப்பதில் தொடர்ச்சியான கற்றல், தகவமைப்பு மற்றும் தொழில்முறை நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களிடமிருந்து மொத்தம், 499 மாணவர்கள் வேலைவாய்ப்புக் கடிதங்களைப் பெற்றனர்.
கல்லுாரி முதல்வர் சதீஷ் குமார், துணை முதல்வர் வாசுதேவன், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவின் தலைவர் தீபன் பாபு, ஒருங்கிணைப்பாளர்கள் துரை பாண்டி, கோகுல கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழா
பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லுாரியில், 11வது பட்டமளிப்பு விழா நடந்தது. யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தாளாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
எக்ஸ்டீரோ முதன்மை ஆராய்ச்சி மற்றும் இயக்குனர் கவிதா, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். விழாவில், 75 மாணவர்கள் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.யுனைடெட் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் கைலாஷ் குமார், திரிசிலா, அருண் கார்த்திகேயன், இணைத் தலைவர் மைதிலி, கல்லுாரியின் முதல்வர் அப்துல் ரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.