தொழிலாளியின் வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம்

0
96

காட்டு யானைகள்

வால்பாறை வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வபோது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் காலநிலை மாற்றம் காரணமாக கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை பகுதிக்கு யானைகள் வருகின்றன. இவ்வாறு வரும் யானைகள் தேயிலை தோட்டத்தில் முகாமிடுவதாலும் தேயிலை தொழிலாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரேஷன் கடையின் மேற்கூரையை உடைத்து, ரேஷன் அரிசியை தின்றும், வெளியே வீசியும் நாசம் செய்தன. இதையடுத்து அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.

தொழிலாளி வீடு சேதம்

இதேபோல நேற்று அதிகாலை 4 மணியளவில் 3 யானைகள் கருமலை எஸ்டேட் பகுதிக்குள் புகுந்தன. பின்னர் அங்கு ஆள் இல்லாத வீட்டை உடைத்து சேதப்படுத்தின. தொடர்ந்து அந்த யானைகள் தேயிலை தோட்ட தொழிலாளி சுந்தரம் என்பவரின் வீட்டையும் உடைத்து சேதப்படுத்தின. மேலும் வீட்டில் உள்ள பொருட்களையும் உடைத்தன.

சத்தம் கேட்டு எழுந்த தொழிலாளி தனது குடும்பத்துடன் வீட்டின் மற்றொரு வாசல் வழியாக தப்பியோடி அருகில் உள்ள தொழிலாளர் வீட்டிற்கு சென்றார். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். இதையடுத்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பொதுமக்கள் பீதி

ஆனாலும் காட்டு யானைகள் தொடர்ந்து அந்த பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மேலும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொழிலாளர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.