தமிழகத்தின் மற்றெந்த பகுதிகளை விடவும், கோவை மாவட்டத்தில் மனித வனவிலங்கு முரண்பாடுகள் அதிகம். குறிப்பாக யானைகள்.
‘தம் இயல்பான வாழிடத்தை விட்டு அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகளால் பயிர், உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. அந்த யானைகளை வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்’ என்பது, விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.
கடுமையாக பாதிக்கும்
வனவிலங்குகளின் நடத்தை, அவற்றின் அறிவியல் பற்றிப் போதிய புரிதல் இன்றி, அவற்றை இடமாற்றம் செய்யக் கோருவது அபத்தமான வாதம். அவ்வாறு இடமாற்றம் செய்வது அந்த வனவிலங்கைக் கடுமையாகப் பாதிக்கும். சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படும் என, கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றன சூழலியல் அமைப்புகள்.
இது குறித்து கோவை, மாநில வனப்பணிக்கான மத்திய உயர் பயிற்சியகத்தின் முதல்வர் திருநாவுக்கரசிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது:
கோவை மட்டுமல்லாது, மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில், புலி, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான்களும் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியே வருகின்றன.
25 ஆண்டுகளுக்கு முன் யானைகளின் வலசைப் பாதையில் மானாவாரியாக சோளம் பயிரிடப்பட்டிருந்தது. இப்போது, கரும்பு வாழை பயிரிடுவதால், அவை அதிகம் ஈர்க்கப்படுகின்றன. மனிதர்களைப் போலவே யானைகளின் நடத்தையிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. தினமும் 200 கிலோ உணவு தேவைப்படும் நிலையில், ஓரிடத்தில் விதவிதமான உணவுகள் கிடைக்கும்போது அங்கேயே தங்க முற்படுகின்றன.
பாதை மறிக்கும் கட்டடங்கள்
யானைகளின் பாதைகளில், கல்வி நிறுவனங்கள், ஆன்மிக தலங்கள், ரிசார்ட்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் அவற்றுக்கு தடை ஏற்படுத்துகின்றன. எனவே, திசை மாறுகின்றன. பொதுவாக யானைகள் மனிதர்களைத் தவிர்த்து விலகிச் செல்ல நினைக்கும் விலங்குகள்.
கோவை கோட்ட வனப்பகுதி, வாளையாறு முதல் சிறுமுகை வரை 350 கி.மீ., நீளமுள்ளது.
அவ்வளவு தூரத்துக்கு வேலி அமைப்பது சாத்தியமற்றது. நில அமைப்பும் அதற்கு ஒத்துழைக்காது.
இப்பகுதியில் 350 யானைகள் உள்ளன. இவற்றில், 50-60 யானைகள் இப்பகுதியிலேயே இருப்பவை. 300 யானைகள், வலசை வருபவை.
2005ம் ஆண்டுக்குப் பிறகே, யானைகளின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டு, அடிக்கடி வெளியே வருகின்றன.
அவற்றின் வெளியேற்றத்தை ஆய்வு செய்ததில், நவ., – ஜன., காலகட்டத்தில்தான் அதிகம் வெளியே வந்துள்ளன. இக்காலகட்டத்தில், வனம் செழிப்பாக இருக்கும். எனவே, வனத்துக்குள் உணவில்லாமல் அவை வெளியேறவில்லை என்பது உறுதியாகிறது.
வால்பாறை உதாரணம்
யானைகளைப் புரிந்துகொண்டால், யானை – மனித முரண்பாடுகளைத் தவிர்க்கலாம். இதற்கு வால்பாறை உதாரணம். அங்கு, மக்களிடையே யானைகளின் நடத்தை, நடமாட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனால், 2011க்குப் பிறகு, பிரச்னை இல்லை; யானையால் உயிரிழப்பே இல்லை.
யானைகள், தமது பாதை, எங்கு என்ன இருந்தது, எங்கு என்ன உணவு கிடைக்கும், பழம், பட்டை, கிழங்கு கிடைக்குமிடம் என அனைத்தையும் நினைவில் வைத்திருக்கும்.
கோவை வனக்கோட்டத்தில் 350 யானைகள் இருந்தால், அவை அனைத்தும் வனத்தை விட்டு வெளியேறுவதில்லை.
யானைகளை பிடிக்கும்போது கும்கியைப் பயன்படுத்துதல், மயக்க ஊசி, வாகனத்தில் ஏற்றுதல், மீண்டும் இறக்கி விடுதல் இவற்றின்போது அந்த யானைக்கு உடல், மன ரீதியான பிரச்னை ஏற்படும். சில சமயங்களில் மயக்க ஊசி செலுத்தும்போது, உயிரிழப்புக்கும் வாய்ப்புள்ளது.
வேறிடத்தில் விடும் யானையை, தொடர்ந்து கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். இடுக்கியில் இருந்து களக்காடு முண்டந்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அரிசிக்கொம்பன், தொடர் கண்காணிப்பில் இருக்கிறது.
அந்த யானையின் நடத்தையைத் தீவிரமாக ஆய்வு செய்து, அதனைத் தொடர்ந்து வனத்துக்குள் விரட்டி, அதன் நடத்தையை மாற்றுவதற்கு முயற்சிகளை வனத்துறை மேற்கொள்கிறது. வலசைப்பாதை தடைகள் அகற்றப்பட்டு, அகலப்படுத்தப்படுகின்றன.
பயிர் சாகுபடியில் மாற்றம்
மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. எலுமிச்சை, நார்த்தை, மிளகாய் என பயிர்சாகுபடி முறை மாற்றம், வழித்தடங்களில் தடை ஏற்படுத்தாமல் இருத்தல், அவை வரும் பாதை, நேரத்தை அறிந்து எதிர்கொள்ளாமல் தவிர்த்தல் போன்றவற்றைத் தொடர்ந்து பின்பற்றினால், யானை–மனித முரண்பாட்டை தவிர்க்கலாம்.
எனவே, விழிப்புணர்வு மட்டுமே இதைச் சாத்தியமாக்கும். மக்களும் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக யானைகளும் மனிதர்களும் இணக்கமாக வாழலாம். ஆனால் இடம் மாற்றுவது சரியாகாது.
இவ்வாறு, திருநாவுக்கரசு தெரிவித்தார்.